கடந்த 2006-2011 தி.மு.க. ஆட்சியில் கவுன்சிலர்களின் அடாவடி செயலால்தான், 2011 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க எதிர்க்கட்சி அந்தஸ்தையே இழந்தது. இந்த நிலையில், மீண்டும் கவுன்சிலர்களின் ‘அட்ராசிட்டி’ ஆரம்பித்துவிட்டது.

கோவை மாவட்டம் போத்தனூர் அடுத்த நஞ்சுண்டாபுரம் பஸ் திருப்பம் எதிரே, குளத்துபாளையத்தை சேர்ந்தவர் சுரேஷ், கடந்த மூன்று மாதங்களாக டீ கடை நடத்தி வருகிறார். சம்பவ தினத்தன்று இரவு மாநகராட்சி, 62வது வார்டு கவுன்சிலர் ரேவதியின்(தி.மு.க.) கணவர் முரளி, நண்பர்கள் சந்தோஷ், கிருஷ்ணமூர்த்தி ஆகியோருடன் டீ கடைக்கு வந்தார். அங்கிருந்த சுரேஷிடம் கடையில் முதல்வர் ஸ்டாலின் படத்தை வைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

‘கடைக்கு அனைவரும் வருவர்; முதல்வர் படம் வேண்டாம். இதுகுறித்து மறுநாள் பேசலாம்’ என, சுரேஷ் பதிலளிக்க, கோபமடைந்த மூவரும் அங்கிருந்து சென்றனர். ஒரு மணி நேரத்துக்கு பின் மீண்டும் வந்த மூவரும் மதுபோதையில், ‘உன்னால் முதல்வர் படத்தை வைக்க முடியாதா’ எனக்கூறி, பிஸ்கெட் வைத்திருந்த பாட்டில்களை உடைத்தும், தண்ணீர் கேன்களை தூக்கி வீசியும் மிரட்டிச்சென்றனர்.

இதுகுறித்து, மறுநாள் சுரேஷ் அப்பகுதியில் தேவேந்திரகுல வீதியில் வசிக்கும் சண்முகம் என்பவரிடம் தெரிவித்துள்ளார். சண்முகம் தி.மு.க.வை சேர்ந்த சந்தோஷ் என்பவரிடம், போனில் தொடர்பு கொண்டு வாக்குவாதம் செய்துள்ளார். சிறிது நேரத்தில் அங்கு வந்த சந்தோஷ், ஒன்றரை அடி நீளமுள்ள கத்தியை சண்முகத்தின் கழுத்தில் வைத்து மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதனைக்கண்டு அருகிலிருந்தோர் ஓடி வர, சந்தோஷ் அங்கிருந்து தப்பினார். போதையில் ஆளும் கட்சி கவுன்சிலரின் கணவர் செய்த செயல் அப்பகுதியினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து சுரேஷ், சண்முகம் புகாரின்பேரில், போத்தனூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal