மேட்டூர் அணை நவமி நாளில் திறக்கப்பட்டது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. காவிரி நீர் பிடிப்பு பகுதியில், நல்ல மழை பெய்து வருவதால், சேலம் மாவட்டம், மேட்டூர் அணைக்கு அதிக நீர் வரத்து உள்ளது. நேற்றைய நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர் மட்டம், 117.7 அடியாக இருந்தது. அதிக நீர்வரத்து தொடர்வதால், குறுவை சாகுபடிக்காக, மேட்டூர் அணையில் இருந்து வழக்கமாக நீர் திறக்கப்படும் நாளான, ஜூன் 12க்கு முன்னதாக, நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது.

நேற்று காலை, 11:00 மணிக்கு, எமகண்டம் முடிந்த பின், முதல்வர் ஸ்டாலின், அணைக்கு வந்தார். காலை, 11:14 மணிக்கு தண்ணீரை திறந்து வைத்தார். அணை கட்டப்பட்ட நாள் முதல், குறுவை சாகுபடிக்கு, மே,24ல் தண்ணீர் திறந்து விடப்பட்டது, இதுதான் முதன்முறை. இது ஒரு வகையில் மகிழ்ச்சியை தந்தாலும், நவமி நாளில் அணை திறந்தது சரியல்ல என்று கூறப்படுகிறது. இதற்கு காரணம், ஜோதிடர்கள் சொன்ன ஆலோசனையாக இருக்கலாம் என்ற, சந்தேகம் எழுந்துள்ளது.

இதுபற்றி, பிரபல ஜோதிடர்கள் கூறுபோது, ‘‘தேர்தல் நடந்த சமயத்தில், ஆட்சி அதிகாரத்தை வழங்கக் கூடிய சனி பகவான், முதல்வருக்கு ஆறாம் இடத்தில் சஞ்சரித்து, எதிரிகளை வெல்லக்கூடிய நிலையை உருவாக்கினார். உடல் நிலையில் இருந்த சங்கடங்களையும் அகற்றி, சுறுசுறுப்பக செயல்படக்கூடிய நிலையை வழங்கினார். அவரை எதிர்த்தவர்கள் பலமிழந்து போகினர். இன்று முதல் சனி வக்கிர கதி அடைகிறார். இதுநாள் வரை, முதல்வருக்கு பல்வேறு நன்மைகளை வழங்கி வந்த சனி பகவான், அவற்றிற்கு எல்லாம் எதிர்மறையான நிலைகளை உருவாக்குவார். சனி பகவான் வக்கிரம் அடைவதால், அரசுக்கு எதிரான செயல்கள் இனி தோன்றும்.

இதுவரை ஆதரவாக இருந்தவர்களும் எதிராவர். எதிரிகள் செல்வாக்கு அடையக்கூடிய நிலை உருவாகும். தேவையற்ற சங்கடங்களை சந்திக்க வேண்டியதாகவும் இருக்கும். நவமி திதியில் அணையை திறந்துள்ளார்.

பொதுவாக அஷ்டமி, நவமியில் நாட்டுக்கு சுபிட்சத்தை உண்டாக்கக் கூடிய பணியை, அக்கால அரசர்கள் முதல் இக்காலத்திய முதல்வர்கள் வரை யாரும் மேற்கொண்டதில்லை. முதல்வர் ஜாதகத்தில், ஏப்ரல் 13 முதல் குரு பகவான் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரித்து வருகிறார். இது, அவருக்கு சாதகமான நிலை அல்ல. சிந்திக்காமல் சில செயல்களை செய்து, அதனால் சங்கடங்களை எதிர்கொள்ள நேரிடும்’’என்றனர்.

மேலும் பிரபல ஜோதிடர் ஒருவர் கூறுபோது, ‘‘பொதுவாகவே அஷ்டமி, நவமி நாட்களில், நல்ல காரியங்களை துவக்க மாட்டார்கள். வளர்பிறையாக இருந்தாலும், தேய் பிறையாக இருந்தாலும், அந்த இரு தினங்களில், நல்ல காரியங்களை துவக்க மாட்டார்கள். முதல்வரின் ராசிப்படி, நேற்று செவ்வாய் கிழமை, நவமியில் மேட்டூர் அணையை திறந்திருக்கக் கூடாது. யார் ஆலோசனை எனத் தெரியவில்லை. இதனால், விவசாயம் பாதிக்கப்படக்கூடும்’’ என்றார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal