வருகிற 2024 நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி 3 குழுக்களை அமைத்திருக்கிறார். இதில் தேர்தல் வியூக நிபுணர் சுனில் இடம் பெற்றிருக்கிறார். பிரசாந்த் கிஷோருக்கு போட்டியாக காங்கிரஸ் மேலிடம் சுனிலை களத்தில் இறக்கியிருக்கிறது.

பிரசாந்த் கிஷோரை தவிர்த்து சுனில் இடம் பிடித்திருப்பது பற்றி அரசியல் பார்வையாளர்கள் சிலரிடம் பேசினோம்.

‘‘வெற்றி பெறப்போகும் அணி மீது சவாரி செய்வது பிரசாந்த் கிஷோரின் வியூகம் என்றால், தோல்வியால் துவண்டு அரசியல் வாழ்வின் விளிம்பில் இருப்பவர்களை கை தூக்கி விடுவது சுனிலின் ஸ்டைல். அப்படிப்பட்ட சுனிலை காங்கிரஸ் கட்சி தனது அரசியல் விவகார குழுவின் துணை அமைப்பான டாஸ்க் 2024 என்ற குழுவில் உறுப்பினராக நியமித்துள்ளது.

ஐ-பேக் என்ற அமைப்பு மூலம் இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகளை டிஜிட்டல் நோக்கி நகர வைத்தவர் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர். இவர் முதன் முதலில் கடந்த 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் பாரதிய ஜனதா கட்சிக்கு பணியாற்றினார். அந்த தேர்தலில் வென்று பாஜக வெற்றி வாகை சூடியது. அப்போது அவருடன் இணைந்து பணியாற்றியவர்தான் இந்த சுனில்.

சுனிலுக்கும், பிரசாந்த் கிஷோருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரிடமிருந்து விலகி டெல்லியில் இருந்த தனது முகாமை தமிழ்நாட்டிற்கு மாற்றினார். அப்போது திமுக என்ன செய்தால் தங்களது கட்சியை வெற்றியை நோக்கி நகர வைக்க முடியும் என யோசித்து கொண்டிருந்தது. இந்த நேரத்தில்தான் சில நண்பர்கள் மூலம் திமுக தலைவர் முக ஸ்டாலினின் மருமகன் சபரீசன் அறிமுகம் கிடைத்தது.

சுனில் முதல் சந்திப்பிலேயே தனது திறமையின் மூலம் சபரீசனின் மனம் கவர்ந்தாராம். உடனே அவர் தனது மாமாவான ஸ்டாலினிடம் அழைத்து சென்றுள்ளார். அப்போது அவர் மாநிலம் முழுவதும் ‘முடியட்டும், விடியட்டும்’ என்ற பொதுக்கூட்டம் நடத்த வேண்டும் எனவும், காலந்தொட்டு நடைபெறும் பொதுக்கூட்டங்கள் போல் இல்லாமல், மாடர்னாக ஸ்டேஜ் அமைய வேண்டும் என பல்வேறு திட்டங்களை வகுத்து கொடுக்கிறார்.

இதனைக் கேட்டு மகிழ்ச்சியடைந்த ஸ்டாலின், உடனடியாக அன்று கட்சித் தலைவராக இருந்த கருணாநிதியின் அனுமதியைப் பெற்று மாடர்ன் ஸ்டைலில் மாநிலம் முழுவதும் பொதுக்கூட்டம் நடத்துகிறார். அத்தோடு நிற்காமல் தேர்தலுக்கு முன்பு ‘நமக்கு நாமே’ என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இவை இரண்டும் துவண்டு கிடந்த திமுக தொண்டர்களுக்கு உற்சாகத்தை அளித்தது. அதனையடுத்து 23 சட்டமன்ற தொகுதிகளை வைத்திருந்த திமுக 89 சட்டமன்ற உறுப்பினர்களை பெற்றது. இருந்தாலும் எதிர்கட்சி வரிசையில்தான் அமர்ந்தது.

அதற்கு காரணம்,, அன்று பாமகவில் அன்புமணியை முதல்வர் வேட்பாளராக அறிவித்து திமுக ஸ்டைலிலேயே டஃப் கொடுத்தது. மக்கள் நலக்கூட்டணியினர் வேறு ஒரு குறிப்பிட்ட சதவிகித வாக்குகளை பிரித்தனர். இதுவே திமுகவின் தோல்விக்கு காரணம் என கூறப்பட்டன. எதிர்கட்சிகளை திமுகவின் குடையின் கீழ் கொண்டு வர வேண்டும் என சுனில் டீம் ஸ்டாலினுக்கு நோட் போட்டனர். ஏற்கனவே அந்த எண்ணத்தில் இருந்த ஸ்டாலினும் அதற்கு ஒப்புக்கொண்டு விட்டார். அதன் எதிரொலியாக கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி தமிழகத்தில் உள்ள 40 தொகுதிகளில் 39 தொகுதிகளை தன் வசமாக்கியது. இது அன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பேரிடியாகவே விழுந்தது. இந்தியா முழுவதும் அமோக வெற்றிப் பெற்ற பாஜகவிற்கு இது பெரும் ஏமாற்றத்தை அளித்தது. இதற்கிடையே, தமிழகத்தில் கால் பதிக்க நினைத்த பிரசாந்த் கிஷோர், அதிமுக, மக்கள் நீதி மய்யம் என எல்லோருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். யாரும் அவருடைய பிளானுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை. அதற்கு காரணம் அவர் கேட்ட ‘கட்டணம்’ எனக் கூறப்படுகிறது.

கடைசியாக திமுக பக்கம் தன் கடையை விரித்தார் பிரசாந்த் கிஷோர். இவருடன் இணைந்து உங்களால் பணியாற்ற முடியுமா? என சுனிலிடம் திமுக தலைமை கேட்டது. சற்றும் யோசிக்காத சுனில், அவருடன் என்னால் பயணிக்க முடியாது என்பதை நேரடியாகவே தெரிவித்துவிட்டார். அத்தோடு இல்லாமல் ஒன் மேன் குரூப்பின் (ஓ.எம்.ஜி) நிர்வாகத்தில் இருந்து விலகுவதாக கடிதமும் கொடுத்துவிட்டு நடையை கட்டினார். பின்னர் கர்நாடகாவிற்கு சென்று பாஜகவிற்கு பணியாற்ற எடியூரப்பாவிடம் அப்போது பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போதுதான் அன்றைய முதலமைச்சரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமியின் காதுகளுக்கு சுனிலைப் பற்றிய தகவல்கள் எட்டியது.. உடனே சுனிலை தங்களது கட்சிக்கு பணியாற்றும்படி எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்தார். அதனை ஏற்று அதிமுகவிற்கு வியூகம் வகுத்து கொடுத்தார்.

மிகவும் மோசமான நிலையில் அதிமுக இருக்கிறது, அதனால் அடுத்த சட்டமன்றத் தேர்தலில் மொத்த கூடாரமும் காலியாகிவிடும் என திமுக கணித்திருந்தது. அதனை முறியடித்து இவரது வியூகத்தால் வலுவான எதிர்கட்சியாக இன்று சட்டப்பேரவையை அலங்கரித்து கொண்டுள்ளது. தமிழகத்தில் தேர்தல் முடிவடைந்ததை தொடர்ந்து விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மாணிக் தாகூர் மூலம் இவரை பற்றிய தகவலை அறிந்த ராகுல்காந்தி இவரை தெலுங்கானா மாநிலத் தேர்தலுக்கு பணியாற்ற வருமாறு அழைப்பு விடுத்தார். அதைத்தொடர்ந்து அங்கு பணியாற்றி வரும் சுனிலின் பணிகளை அம்மாநில காங்கிரசார் வெகுவாக பாராட்டி வருகின்றனர். இந்த சூழ்நிலையில்தான் காங்கிரஸ் பக்கம் தன் கடையை விரித்தார் பிகே. இந்த முறை தேர்தல் வியூக வகுப்பாளராக அல்ல. காங்கிரஸ் கட்சியில் இணைய தயார், மொத்த கட்சியும் தன் கட்டுப்பாட்டில் வர வேண்டும் என்ற திட்டத்தோடு காங்கிரஸ் தலைமை அனுகினார் பிகே.

அவரது ஆலோசனை கேட்டுக்கொண்ட காங்கிரஸ் கட்சி, அவர் விருப்பப்படி கட்சியின் முழுக்கட்டுபாட்டை அவரின் விருப்பபடி எல்லாம் கொடுக்க முடியாது எனக் கூறிவிட்டது. இந்த சூழ்நிலையில்தான் காங்கிரஸ் கட்சியின் அரசியல் விவகார குழு அமைக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் துணை அமைப்பான டாஸ்க் -2024 என்ற அமைப்பில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் கீழ் சுனில் பணியாற்றுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது பிகேவிற்கு காங்கிரஸ் வைத்த செக்காகவே பார்க்கப்படுகிறது. சுனிலின் வியூகம் வருங்காலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு பலத்தை சேர்க்கும் என்கிறார்கள். அதே சமயம் பிரசாந்த் கிஷோர் பி.ஜே.பி.க்கு போவதைத் தவிர வேறு வழியில்லை’’ என்றனர்.

அடுத்தடுத்து காங்கிரஸ் கட்சி எடுக்கப் போகும் மூவ்கள்தான் பி.ஜே.பி.க்கு கொஞ்சம் நெருக்கடியை கொடுக்கும் என்கிறார்கள்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal