தமிழக அமைச்சர்கள் சிலருக்கும், மூத்த அதிகாரிகள் சிலருக்கும் கருத்துவேறுபாடுகள் அதிகாரித்து வருவது. இதனால் பணிகளில் சுணக்கமும், அமைச்சர்களுக்கு வருமானத்தில் சுணக்கமும் ஏற்படுவதாக தகவல்கள் வருகிறது.

இது பற்றி மூத்த அதிகாரிகள், அமைச்சர்கள் வட்டாரத்தில் பேசினோம்.

‘‘தமிழக அமைச்சர்கள் தங்களது துறைகளில் சில மாற்றங்களை கொண்டுவர முயற்சித்து வருகின்றனர். ஆனால், அதற்கு அதிகாரிகள் முட்டுக்கட்டை போட்டுவிடுகின்றனர். அதேபோல, சில ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், ‘எங்களால் அமைச்சர் கூறுவதுபோல செயல்பட முடியாது; வேண்டுமானால் எங்களை வேறு பதவிக்கு மாற்றுங்கள்’ என தெரிவித்துள்ளனர். அமைச்சர் – அதிகாரி மோதல் தொடர்ந்தால், திட்டப் பணிகளை நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்படும் என்பதால், அதிகாரிகள் சிலரை மாற்ற முடிவு செய்யப்பட்டது.

ஆனால், சட்டசபை கூட்டத் தொடர் நடந்ததால், அதிகாரிகள் மாற்றம் ஒத்தி வைக்கப்பட்டது. அதேபோல, சட்டசபை கூட்டத் தொடர் முடிந்ததும், அமைச்சரவையில் மாற்றம் செய்ய, முதல்வர் திட்டமிட்டுள்ளார். உதயநிதியும் அமைச்சரவையில் முக்கியப் பொறுப்பு வழங்கப்பட இருக்கிறது. மந்தமாக செயல்படும் அதிகாரிகள், சரியாக செயல்படாத அமைச்சர்கள் மாற்றப்படுவர் என, தகவல் வெளியானது. இந்நிலையில், அமைச்சரவை மாற்றத்திற்கு முன், அமைச்சர்கள் வேண்டு கோளை ஏற்று, அதிகாரிகள் சிலரை மாற்ற, முதல்வர் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, கூட்டுறவுத்துறை, வீட்டு வசதித்துறை உட்பட பல துறைகளில், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மாற்றப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சர்கள் மற்றும் தி.மு.க., மாவட்ட செயலர்கள் பலர், தங்கள் மாவட்ட எஸ்.பி.,க்களை மாற்றும்படி கூறியுள்ளனர்.

சில உயர் பதவிகளில் உள்ள, ஐ.பி.எஸ்., மற்றும் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் வேகமாக செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்து உள்ளது. எனவே, பெரிய அளவில் ஐ.ஏ.எஸ்., – ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மாற்றம் தொடர்பான அறிவிப்பு, விரைவில் வெளியாக வாய்ப்புள்ளது’’ என்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal