நாடாளுமன்ற  தேர்தல் 2-வது கட்டமாக இன்று நடக்கிறது. கேரளா உள்பட 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 89 தொகுதிகளில் இந்த வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. கர்நாடகா மாநிலத்தில் 14 தொகுதிகளுக்கு முதல் கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இந்நிலையில் நடிகர் பிரகாஷ்ராஜ் பெங்களூருவில் உள்ள வாக்குச்சாவடியில் வரிசையில் காத்திருந்து தனது வாக்கை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது;- ‘தேர்தலில் வாக்களிப்பது முக்கியமான விஷயம். நீங்கள் தேர்ந்தெடுக்கப்போகிறவர்தான் உங்களுடைய எதிர்காலத்தை நிர்ணயிப்பவர்.

ஓட்டு போடவில்லையென்றால் கேள்வி கேட்கும் தகுதியும், உரிமையும் உங்களுக்கு இல்லாமல் போய்விடும். நாடாளுமன்றத்தில் எனது குரலாக யார் குரல் கொடுப்பார்கள் என்று எனது வாக்கானது என்னுடைய உரிமையை நிலை நாட்டுகிறது. நீங்கள் நம்பும் வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியம், கடந்த 10 ஆண்டுகளில் நான் கண்ட வெறுப்பு மற்றும் பிளவுபடுத்தும் அரசியல் மாற்றத்திற்காக நான் நம்பும் வேட்பாளருக்கு வாக்களித்துள்ளேன்’, என்று தெரிவித்தார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal