தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் லஞ்சத்தில் திளைத்து வருகிறது என்பது எல்லோருக்கும் தெரியும்! காரணம்… சமீபத்தில் எழிலகத்தில் உள்ள ஆணையர் அலுவலகத்தில் கட்டுக்கட்டாக கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டது. இந்த நிலையில் நேற்று கோவை போக்குவரத்து வட்டார அலுவலகத்தில் கணக்கில் வராத லட்சக்கணக்கில் பணத்தை அதிகாரிகள் கைப்பற்றினர்!

போக்குவரத்துக் கழக மேல்மட்டத்தில் நடக்கும் லஞ்சப் பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு நடத்தி கைப்பற்றி விடுகிறார்கள். திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் பணிமனையில் லைட் டூட்டிக்கும், ஒரு நாள் லீவு கொடுப்பதற்கும் மூவர் முத்துக்குளித்து வருகிறார்கள். இது பற்றி பத்திரிகைகளில் செய்தி வெளிவந்தும் நடவடிக்கை இல்லை என்று கொந்தளிக்கிறார்கள் போக்குவரத்துக் கழக ஊழியர்கள்.

இது பற்றி உப்பிலியபுரம் பணிமனையில் பணிபுரியும் ஓட்டுநர் – நடத்துநர்களிடம் பேசினோம்.

‘‘சார்.., உப்பிலியபுரம் பணிமனையைப் பொறுத்தளவிற்கு தொழிற்சங்கத்தில் ‘தலை’யாக இருப்பவர் சமீபத்தில் கிளை மேலாளரை தரக்குறைவாக பேசிய விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மீண்டும் பணிக்கு சேர்ந்த அவருக்கு பெரம்பலூருக்கு இடமாற்றம் செய்ய போக்குவரத்து அதிகாரிகள் முடிவு செய்தனர்.

ஆனால், ‘எங்களுக்கு என்றைக்கும் போக்குவரத்துத்துறை அமைச்சர் கே.என்.நேருதான். போக்குவரத்து துறை அமைச்சரே நினைத்தாலும் எங்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது’ என்று அவர் அடித்துக்கூறி, அந்த டிரான்ஸ்பரையும் அப்படியே நிறுத்தி வைக்கும் நடவடிக்கையில் இறங்கியிருக்கிறாராம். நிறுத்தி வைத்து விட்டார் என்கிறார்கள் அந்த பணிமனையில் பணிபுரியும் ஊழியர்கள்!

இதே போல், திருப்பதி ஏழுமலையான் பெயர் கொண்ட அதிகாரி, ‘ஏழுமலையானே பணக்கார கடவுள்தான் தெரியுமா?’ என்று ஓட்டுநர்களிடம் பேசுவதோடு, வாகனத்தை இயக்கும்போது அதிகமாக டீசலை செலவு செய்த ஓட்டுநர்களிடம் ‘கவனிப்பை’ எதிர்பார்க்கிறாராம். இவர் கடந்த ஆறு வருடங்களுக்கு மேலோக இதோ பணிமனையில் கோலோச்சி வருகிறாராம். இவரிடம் பேசுவதற்கே தயங்குகிறார்களாம் பணியாளர்கள். காரணம், இவரும் ‘மலைக்கோட்டை மன்னரின்’ பெயரைதான் பயன்படுத்தி வருகிறாராம்.

இந்த அதிகாரிதான் இப்படி என்றால், இவருக்கு கீழ் உள்ள இளைய அதிகாரியோ, இலகு ரக வாகனத்தை ஓட்டுநர், நடத்துனர்களுக்கு ஒதுக்குவதற்கு, மாலை நேரத்தில் ‘கவனிப்பை’ எதிர்பார்க்கிறாராம்! இதே நிலை நீடித்தால், உப்பிலியபுரம் பணிமனையில் யாரும் வேலை செய்ய முடியாது.

இதைவிடக் கொடுமை, ஒரு தொழிற்சங்க நிர்வாகியையே, கிளை மேலாளர் சஸ்பெண்ட் செய்கிறார். இதுபோன்ற கொடுமை எந்த பணிமனையிலும் நடக்காது. உப்பிலியபுரம் பணிமனையில்தான் நடக்கிறது. இந்த மூவரின் முத்துக் குளிப்பிற்கு மேல் அதிகாரியும்தான் உடந்தையாக இருக்கிறார் என்கிறார்கள். போக்குவரத்துத்துறை அமைச்சர் நேரடியாக இந்த பணிமனையை ஆய்வு செய்தால் இன்னும் பல முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வரும்.

இந்த மாதிரியான நிலை உப்பிலியபுரம் பணிமனையில் மட்டும் நடக்கவில்லை. தமிழகம் முழுவதும் பரவலாக நடக்கிறது. ஆனால், இங்குதான் ‘ஆட்டம்’ அதிகமாக இருக்கிறது.

புதிதாக பொறுப்பேற்ற அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்தான், உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு வாகனத்தை இயக்கும் ஓட்டுநர்கள் வயிற்றிலை பாலை வார்த்து, ‘முத்து’ குளிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal