தமிழகத்தில் தி.மு.க. அரசு செயற்கையான மின்வெட்டை உருவாக்கி வருகிறது என்று பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்திருந்தார். இதில் எந்தளவிற்கு உண்மை இருக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தால், ‘உண்மையாக இருக்குமோ..’ என்ற தகவல்தான் நமக்கு கிடைக்கிறது.

நாட்டில் 2,200 கோடி டன் கிலோ இருப்பு இருந்தும், தமிழகத்துக்கு, 5 கோடி டன் கிலோ தினமும் கொடுக்கப்பட்டாலும், நிலக்கரி பற்றாக்குறை என, மத்திய அரசு மீது, தமிழக அரசு பழிபோடுவது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழகத்தில் 2021 மே 7-ம் தேதி, தி.மு.க., அரசு பொறுப்பேற்ற சில மாதங்களிலேயே, பல்வேறு மாவட்டங்களில் அடிக்கடி மின் தடை ஏற்பட்டது. இதற்கு விளக்கம் அளித்த மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மின் கம்பிகளில் அணில்கள் தாவி செல்வதால், மின் தடை ஏற்படுவதாக கூறினார். இது, பெரும் சர்ச்சையானது. தமிழகத்தில் தற்போது கோடை காலம் தொடங்கி, வழக்கத்தை விட வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், ஒரு மாதமாகவே பல இடங்களில் அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது.

இந்நிலையில், இம்மாதம், 20-ம் தேதி, தமிழகம் முழுதும் பெரும்பாலான இடங்களில், 10 மணி நேரம் வரை மின் தடை ஏற்பட்டது. இதற்கு விளக்கம் அளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, ‘‘மத்திய தொகுப்பில் இருந்து, தென் மாநிலங்களுக்கு வழங்கப்படும், 750 மெகாவாட் மின்சாரம் திடீரென தடைபட்டது.இதனால், ஏற்பட்ட மின் பற்றாக்குறையை சமாளிக்க, தனியாரிடமிருந்து கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தார்.

கடந்த 2006- &- 11 தி.மு.க., ஆட்சியில் மின் வெட்டு மிகப்பெரும் பிரச்னையாக இருந்தது. ‘2011 சட்டசபை தேர்தலில், தி.மு.க., படுதோல்வி அடைந்ததற்கு, மின் வெட்டு பிரச்னையே காரணம்’ என, அப்போதைய மின் துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி ஒப்புக் கொண்டார்.

தற்போது, மின் வெட்டு பிரச்னை தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ள முதல்வர் ஸ்டாலின், ‘‘உள்நாட்டு நிலக்கரி பற்றாக்குறை காரணமாகவே, தமிழக மின் வாரியம், அதிக விலை கொடுத்து, நிலக்கிரியை இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது. தமிழக மின் உற்பத்தி நிலையங்களில், நிலக்கரி இருப்பு, கவலை அளிக்கத்தக்க அளவில் உள்ளது’’ என்று கூறியுள்ளார்.

கடந்த, 2011-ல் அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், இரண்டு ஆண்டுகள் வரை மின் வெட்டு பிரச்னை இருந்தது. அதன்பின், தமிழகத்தில் இல்லாத மின் வெட்டு, இப்போது மீண்டும் ஏற்பட துவங்கியுள்ளது. இதை சுட்டிக்காட்டியுள்ள தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, ‘‘தமிழகத்தில் எப்போதெல்லாம் தி.மு.க., ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் மின் வெட்டும் வந்து விடுகிறது.7,700 கோடி கிலோ தனியாரிடம் அதிக விலைக்கு மின்சாரம் வாங்குவதற்காகவே, செயற்கையான மின் தடை ஏற்படுத்தப்படுகிறது’’ என்று குற்றம் சாட்டியுள்ளார்.

‘‘தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின் தடைக்கு, முதல்வர் ஸ்டாலின் கூறுவது போல, நிலக்கரி பற்றாக்குறை காரணமாக இருக்க முடியாது’’ என, மின் வாரிய முன்னாள் அதிகாரிகளும் கூறுகின்றனர்.ஏனெனில், ‘‘2021- -& 22-ல் இதுவரை இல்லாத அளவுக்கு, 7,700 கோடி கிலோ நிலக்கரி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. தற்போது, இந்தியாவில், 2,200 கோடி கிலோ நிலக்கரி இருப்பில் உள்ளது. நாடெங்கும் உள்ள அனல் மின் நிலையங்கள், 30 நாட்கள் தடையின்றி இயங்க, இது போதுமானது’’ என, மத்திய மின் துறை அமைச்சர் ஆர்.கே.சிங் கூறியிருப்பதை, அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

‘தமிழக மின் உற்பத்தி நிலையங்களுக்கு தினசரி தேவைப்படும், 5 கோடி கிலோ நிலக்கரி கிடைத்து வருகிறது. ‘தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில், ஐந்து நாட்களுக்கான நிலக்கரி இருப்பில் இருந்தும், அங்குள்ள நான்கு யூனிட்களில், முன்கூட்டியே உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது’ என கூறும் மின் வாரிய முன்னாள் அதிகாரிகள், ‘தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது செயற்கையான மின் தட்டுப்பாடு என்பதற்கு, இதை விட உதாரணம் தேவையில்லை’ என்கின்றனர்.

தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், 2021 மே முதல் 2022 ஜனவரி வரை, தனியாரிடமிருந்து 2,113 கோடி ரூபாய்க்கு மின்சாரம் வாங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மின் உற்பத்தியை அதிகரிக்காவிட்டால், இன்னும் பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு மின்சாரம் வாங்க வேண்டியிருக்கும்.இதனால், அரசுக்கு பெரும் இழப்பு ஏற்படும்.

மின் உற்பத்தி நிலையங்களில் உற்பத்தி திறனை அதிகரிப்பது; சூரியசக்தி, காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களை அதிகளவில் துவங்குவது ஆகியவை தான், மின் வெட்டு பிரச்னைக்கு நிரந்தர தீர்வாக இருக்க முடியும் என்பதே, இத்துறையில் அனுபவம் வாய்ந்த பலரின் கருத்தாக உள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal