பணம், புகழ் வந்தால் மட்டும் உயர்ஜாதி ஆகி விட முடியுமா என்று இசையமைப்பாளர் இளையராஜா பற்றி, சர்ச்சையாக பேசி உள்ளார் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்.

இசையமைப்பாளர் இளையராஜா புத்தகம் ஒன்றுக்கு எழுதிய அணிந்துரையில், ‘பிரதமர் மோடி தலைமையில், நாடு வளர்ச்சிப் பாதையில் செல்கிறது. ‘முத்தலாக் தடை போன்ற பல்வேறு சமூகப் பாதுகாப்பு திட்டங்களை கண்டு, அம்பேத்கர் பெருமிதம் கொள்வார். அம்பேத்கரும், மோடியும் இந்தியா குறித்து பெரிய கனவு கண்டவர்கள்’ என, கூறியிருந்தார். இதையடுத்து, எதிர்க்கட்சியினர் இளையராஜாவை கடுமையாக விமர்சித்தனர். இதனை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி இருந்தனர். ஆனால், தனது கருத்தை திரும்ப பெறப்போவதில்லை என இளையராஜா கூறியுள்ளார்

இந்நிலையில் ஈரோட்டில் நடந்த விழாவில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் பேசியதாவது:
‘‘பணம் வந்துவிட்டால் நீ உயர்சாதி ஆகிவிட முடியாது. தமிழகத்தில் சில அகராதிகள் இருக்கிறாங்க. கேட்டால் உண்மையிலேயே நான் இசை மன்னன் என்று சொல்லி கொள்கிறார்கள். இசை மன்னன் யார் என்று எல்லோருக்கும் தெரியும். தபேலா எடுத்து அடிக்கிறவர்கள் எல்லாம் இசைஞானி ஆகிவிட முடியாது.

வறுமையில் சாப்பாட்டுக்கே வழி இல்லாத போது கம்யூனிச சித்தாந்தத்தை ஏற்றுக்கொள்வதும், பணமும், புகழும் வந்த பிறகு தன்னை உயர்ஜாதி என நினைத்து கொள்வதும் என்ன நியாயம். நான் யாரை சொல்றேன்னு உங்களுக்கே தெரியும். வயது 80க்கு மேல் ஆகப்போகிறது. கேட்டால் இளையராஜாவாம். ஆரம்பத்தில், தொழிலாளர்களின் நலன் குறித்து பாடிய நீ, பணமும் புகழும் வந்தவுடன் மேலும் பணக்காரன் ஆக வேண்டுமென்ற ஆசையில் நீ திடீரென பக்திமான் ஆகிவிட்டாய். பக்திமான் ஆகலாம். அதனால் தவறு என்று சொல்ல மாட்டேன். அது உங்கள் விருப்பம். உங்கள் விருப்பத்தில் நான் எப்படி தலையிட முடியும்? அது போல எங்கள் விருப்பத்திற்கு நீ மரியாதை கொடு. அதைவிடுத்து அம்பேத்கர் போன்றவர்களுடன் மோடியை ஒப்பிடுவது என்ன நியாயம்? ஓர் அரசிடம் உதவிப் பெற்று படித்த அம்பேத்கர், அப்படியே மேல்நோக்கி பேசியிருக்கலாம்.

ஆனால், வெளிநாடுகளில் சென்று படித்துவிட்டு, இழிநிலையில் இருக்கின்ற தாழ்த்தப்பட்ட மக்களுக்காக உழைக்க வேண்டும் என்ற கடைசி வரை உழைத்தவர். இந்த நாட்டிற்கு அரசியலமைப்பு வகுத்து கொடுத்தவர் அவர்… இந்த நாட்டில் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக உழைத்தவரை ஏன் இப்படி அசிங்கம் செய்கிறீர்கள்? இளையராஜாவிற்கு ஒரு முறை அடிபட்டால் போதாது என நினைக்கின்றேன்’’ சர்ச்சை பேச்சுக்களை மீண்டும் ஒருமுறை அவிழ்த்திருக்கிறார் ஈவிகேஎஸ். இளங்கோவன்

இளையராஜாவை விமர்சிப்பதாக நினைத்து சர்ச்சைக்குரிய வகையில் இளங்கோவன் பேசியுள்ளது விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது. பலரும் இளங்கோவனுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal