பள்ளி, கல்லூரி என மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கூடுதல் கவனம் செலுத்த உத்தரவிட்டுள்ளதாக சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மிழகத்தில் கொரோனா தொற்று பரவல் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் தான் பரவல் அதிகமாக உள்ளது. இதனால் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாடுகளை சுகாதாரத்துறை தீவிரப்படுத்த தொடங்கி உள்ளது. கொரோனா தொற்று மீண்டும் அதிகரிப்பதற்கு பொதுமக்கள் முக கவசம் அணியாமல் சுற்றித்திரிவதே முக்கிய காரணம் என்று சுகாதாரத்துறை குற்றம் சாட்டுகிறது.

தொடர்ந்து தமிழகத்தில் பொது இடங்களில் முக கவசம் அணியாமல் சுற்றினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட கலெக்டர்களிடமும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றறிக்கையும் அனுப்பப்பட்டு உள்ளது.

இதைத் தொடர்ந்து தமிழகத்தில் பொது இடங்களில் மக்கள் முக கவசம் அணியாமல் செல்கிறார்களா என்று சுகாதாரத்துறையுடன் போலீசாரும், உள்ளாட்சி நிர்வாகமும் கண்காணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னை ஐ.ஐ.டி.யில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் அதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஐ.ஐ.டி. வளாகம் முழுவதும் ஆய்வு செய்து தொற்று பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களையும் கண்டறிந்து சோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறார்.

ஐ.ஐ.டி.யில் முதலில் 12 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. நேற்று மேலும் 18 பேருக்கு தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டது. தொடர்பில் உள்ளவர்கள், வளாகத்தில் உள்ள ஊழியர்கள் என சுமார் 2 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதுவரையில் 1,420 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் மேலும் 25 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டு இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று சென்னை தேனாம்பேட்டை வளாகத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

‘‘ஐ.ஐ.டி. வளாகத்தில் 1,420 பேருக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்பட்டதில் 55 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அனைவருக்கும் காய்ச்சல் மற்றும் தொண்டை வலி மட்டுமே உள்ளது. அதனால் அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். அங்கேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் அவர்களுக்கு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. விடுதியின் மூலம் தொற்று பரவியது தெரிய வந்துள்ளது. இதனால் 13 மாநிலங்களில் இருந்து வந்த மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. வளாகத்தில் கொரோனா பரவி வருவதால் 95 சதவீதத்திற்கு மேல் ஐ.ஐ.டி.யில் உள்ளவர்கள் முக கவசம் அணிந்து இருக்கிறார்கள்.

தமிழகத்தில் தற்போது 256 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். அதில் 17 பேர் மருத்துவமனையில் உள்ளனர். ஆக்சிஜன் பிரிவில் 7 பேரும், ஐ.சி.யு.வில் 2 பேரும் சிகிச்சை பெறுகிறார்கள். தமிழகத்தில் தற்போது வரை எக்ஸ்-இ வகை வைரஸ் கண்டறியப்படவில்லை. மார்ச் 2020-ல் இருந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் தற்போது தேவை இல்லை.

ஐ.ஐ.டி.யில் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கும் இடத்தை அவர்களே தனிமைப்படுத்தபட்ட பகுதியாக அறிவித்து இருக்கிறார்கள். பள்ளி, கல்லூரி என மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கூடுதல் கவனம் செலுத்த உத்தரவிட்டு இருக்கிறோம். முதல் 3 அலையில் இருந்த பதற்றம் தற்போது தேவை இல்லை. ஏனெனில் புதிய வைரஸ் பரவலால் பெரிய அளவில் பாதிப்பு வராது. என்றாலும் முதல் 2 அலைகளில் ஏற்பட்ட தாக்கங்களை நினைவில் வைத்திருக்க வேண்டும்’’ இவ்வாறு அவர் கூறினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal