தி.மு.க. ஆட்சிக்கு வந்தாலே லஞ்ச, லாவன்யம், அடிதடி, கட்டப்பஞ்சாயத்து நடக்கும் என்ற எண்ணம் முன்பு இருந்தது. ஆனால், அதுபோல் நடந்துவிடக் கூடாது என்பதில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியாக இருக்கிறார். அமைச்சர்களையே தன் முழு கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கிறார்.

சமீபத்தில்கூட, அத்துமீறலில் ஈடுபடும் தி.மு.க. நிர்வாகிகள் மீது, பாகுபாடின்றி நடவடிக்கை எடுத்து வந்தார். இந்த நிலையில் தான் தென்காசி மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவ பத்மநாபன், நகராட்சி ஆணையர் ஏகராஜிடம், பணம் கேட்கும் ஆடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. அந்த ஆடியோ உரையாடல் வருமாறு:-

‘‘சார்… வணக்கம் நான் தி-முக மாவட்டச் செயலாளர் பேசுகிறேன்’’… சொல்லுங்க சார் சொல்லுங்க’’… ‘‘சார் நீங்க பத்து ‘ரூபாய்’ கொடுக்குறேன்னிங்களாம்… பத்துன்னா வேண்டாம் சார்… என்ன செய்யனும்னு சொல்லுங்க சார்… முடியுதான்னு பாக்குறேன். இங்க ரொம்ப கஷ்டம் சார்… ‘‘இல்ல இல்ல முடிலைன்னா விட்டுடங்க… நிறைய வொர்க் நடந்துட்டு இருக்கு… நீங்க என்னென்ன பண்றீங்கன்னு எங்கக்கிட்ட கம்ப்ளைண்ட் பண்றாங்க… சரி… நீங்க ஆற்காட்டாருக்கு வேண்டப்பட்ட ஆளுன்னுதான் இவ்வளவு நாள் வாயை மூடிக்கிட்டு இருந்தோம்’’…
‘‘சார் இப்ப எவ்வளவு கொடுக்கனும்னு சொல்லுங்க… எங்களால 20 ‘ரூபாய்க்கு’ மேல கொடுக்க முடியாது…’’ அதற்கு ‘‘50 ரூபாய் கொடுத்தா கொடுங்க… இல்லேன்னா வேண்டாம்’’… இத்துடன் இந்த ஆடியோ முடிவடைகிறது. நகராட்சி ஆணையாளர் எகராஜும் நேர்மையான அதிகாரி கிடையாது. அவரும், அதிகளவில் அங்கு பணவேட்டையில் ஈடுபடுவதாக தகவல்கள் வருகிறது.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்துகொண்டு, சொந்தக் கட்சி வேட்பாளரையே தோற்கடித்தவர் சிவ பத்மநாபன். அப்போதே தி.மு.க. தலைமை நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால், நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போதாவது முதல்வர் மு.க.ஸ்டாலின் சாட்டையை சுழற்றுவாரா என்ற எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal