தமிழகத்தில் சமீபத்தில் உயர்த்தப்பட்ட சொத்துவரியைக் கண்டித்து, ஆளுங்கட்சியின் கூட்டணியில் இருக்கும் கட்சிகளே கண்டனங்களை எழுப்பி வருகின்றன.

இந்த நிலையில்தான் த.மா.க. தலைவர் ஜி.கே.வாசன், சொத்துவரி உயர்வைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தை அறிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘தமிழகத்தில் மாநகராட்சிகள் , நகராட்சிகள், பேரூராட்சிகளில் சொத்து வரிகள் உயர்த்துவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக மக்கள் அனைவரும் இந்த வரி உயர்வால் பல்வேறு பிரிவினரும் மிகவும் பாதிக்கப்படுவார்கள். தமிழக அரசு இதனை மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டும் . சொத்துவரி உயர்வு என்பது கடந்த காலங்களில் உயர்த்தப்படும் போது ஏழை, எளிய மக்களின் பொருளாதாரத்தை கவனத்தில் கொண்டு குறைந்த அளவே உயர்த்தப்பட்டது.

ஆனால் தற்பொழுது தமிழக அரசால் 600 சதுர அடிக்கு குறைவான பரப்பளவு உள்ள குடியிருப்புகளுக்கு 25 % சதவிகிதமும் , 601 முதல் 1,200 சதுர அடி குடியிருப்புகளுக்கு 50 % சதவிகிதமும், 1,201 முதல் 1,800 சதுர அடி குடியிருப்பு கட்டடங்களுக்கு 75 % சதவிவிகிதமும், 1,800 சதுர அடிக்கு அதிகமான பரப்பளவுக்கு 100 % சதவிகிதமாகவும் உயர்த்தி இருக்கிறது.

கொரோனா பாதிப்பிலிருந்தும், பொருளாதார இழப்பில் இருந்தும் கொஞ்சம், கொஞ்சமாக மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பிகொண்டு வரும் இந்த வேலையில் இந்த சொத்துவரி உயர்வு என்பது நகர்ப்புற மக்களை மிகுந்த துன்பத்திற்குள்ளாக்கி இருக்கிறது.

சொத்துவரி உயர்வு ஏழை எளிய மக்களை பல்வேறு நிலைகளில் பாதிக்கும். சொத்து உள்ளவர்களுக்கு மட்டுமல்ல இல்லாதவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். அதாவது கிராமங்களில் இருந்து வந்து பணியாற்றும் பெரும்பாலானோர் நகரத்தில் வாடகை வீட்டில் தான் வசிக்கின்றனர். அவர்களது வாடகை உயரவும், வணிக கட்டடங்களின் வாடகை உயர்வால் பொருள்களின் விலைவாசி உயரவும் வாய்ப்புள்ளது.

இதனால் பலதரப்பட்ட மக்களும் பாதிப்பிற்குள்ளாவார்கள். திராவிட முன்னேற்றக் கழகம் தனது தேர்தல் அறிக்கையில் பல்வேறு திட்டங்களை அறிவித்து மக்களின் வாக்குகளை பெற்று ஆட்சியில் அமர்ந்துள்ளது. நாட்டை வளர்ச்சி பாதையில் அழைத்து செல்கிறோம் என்று கூறிக்கொண்டு, நாட்டு மக்களை அதிக வரிவிதிப்பு எற ஆயுதத்தால் வதைப்பது எந்தவிதத்தில் நியாயம்.

தமிழக அரசு மக்களை சிரமதிற்குள்ளாக்கும் இந்த சொத்து வரி உயர்வை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தி வருகிற 11.04.2022 திங்கள்கிழமை காலை 10.30 மணியளவில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பாக எனது தலைமையில், சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம் மாவட்டங்களின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் இயக்க நண்பர்களும் , பொது மக்களும் பெரும்திரளாக கலந்துகொண்டு ஆதரவு தெரிவிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்’’ என்று கூறியிருக்கிறார்.

தா.ம.க. சார்பில் நடத்தப்படும் ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் கலந்துகொள்ள தற்போதே தங்களை ஆயத்தப்படுத்தி வருகின்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal