இரட்டை இலை சின்னம் பெற்றுத்தர அமமுக பொதுச் செயலர் தினகரன் லஞ்சம் கொடுத்ததாக பல்வேறு பண மோசடி வழக்குகளில் சிறையில் சிக்கியிருக்கும் சுகேஷ் சந்திரசேகர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், தினகரன் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர் சுகேஷ் சந்திரசேகர், 33. இவர், அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரனிடம், 2017ல், ‘‘இரட்டை இலை சின்னம் பெற்றுத்தர தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு லஞ்சமாக தர வேண்டும்’’ எனக்கூறி, 50 கோடி ரூபாய் பணம் கேட்டுள்ளார். தினகரன் அவரிடம் 2 கோடி ரூபாய் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. பல்வேறு வழக்குகளில் சிக்கி சிறையில் இருக்கும் இடைத் தரகர் சுகேஷ் சந்திரசேகரை, இரட்டை இலை சின்னம் பெற, லஞ்சம் கொடுத்தது தொடர்பான விவகாரத்தில் நடந்த பண மோசடி தொடர்பான வழக்கிலும் அமலாக்கத்துறையினர் கைது செய்தனர்.

பின், அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பண மோசடி தொடர்பாக, சுகேஷ் சந்திரசேகரிடம் ஏழு நாள் காவலில் விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அவரிடம் அமலாக்கத்துறை நடத்திய விசாரணையில், ‘தினகரன் முன்பணமாக தமக்கு ரூ.2 கோடி கொடுத்ததாக’ சுகேஷ் சந்திரசேகர், அமலாக்கத்துறையிடம் வாக்குமூலம் அளித்ததாக தகவல் வெளியானது.

இந்த நிலையில்தான் தற்போது வாக்குமூலத்தின் அடிப்படையில் தினகரன் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal