சொத்து வரி உயர்வுக்கு மத்திய அரசு மீது பழி போட்டு திமுக அரசு தப்பிக்க முயற்சிக்கிறது என எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார். சொத்து வரி உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் அ.தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருச்சியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசிசுபோது,

‘‘சொத்து வரி உயர்வால், மாதம் ஆயிரம் ரூபாய் கொடுத்து வசித்த வாடகைதாரர்கள், இனி மாதம் ரூ.2,500 வாடகை செலுத்த வேண்டிய சூழல் உருவாகி உள்ளது.தி.மு.க., அரசை பொறுத்தவரை மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அதிமுக ஆட்சியில் வரி உயர்த்தப்படவில்லை. சொத்து வரியை உயர்த்துங்கள் என எந்த இடத்திலும் மத்திய அரசு கொண்டுவரவில்லை. மத்திய அரசு மீது பழியை சுமத்தி திமுக அரசு தப்பிக்க முயல்வது கண்டிக்கத்தக்கது. முதல்வர் ஸ்டாலினுக்கு நிர்வாக திறமையில்லை. திமுக தேர்தல் அறிக்கையில் 487 வது வரிசையில் சொத்து வரியை உயர்த்த மாட்டோம் என கூறிவிட்டு இப்போது அதற்கு நேர்மாறாக நடந்து கொண்டிருக்கிறது. மக்கள் எக்கேடு கெட்டு போனால் என்ன என திமுக அரசு நினைக்கிறது. சொத்து வரி உயர்வை திரும்ப பெற வேண்டும்’’ என்று கொந்தளித்துப் பேசினார்.

சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் பேசும்போது, ‘‘ தேர்தல் நேரத்தில் பொய்யான வாக்குறுதி கொடுத்து திமுக ஆட்சியை பிடித்தது. தேர்தல் அறிக்கையில் கோவிட்டால், பொருளாதாரம் முடங்கிவிட்டதால், நிலைமை சீரடையும் வரை சொத்து வரியை உயர்த்த மாட்டோம் என கூறி இருந்தார்கள். ஆனால், 150 சதவீதம் வரியை உயர்த்தி உள்ளார்கள். இதனால், ஏழை எளிய மற்றும் வாடகைக்கு குடியிருப்பவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். கோவிட் 4வது அலை வரும் என சுகாதாரத்துறை அமைச்சர் கூறுகிறார்.

இச்சூழ்நிலையில் மக்களை வதைக்கும் வகையில் வரி உயர்வை அறிவித்துள்ளார்கள். எப்போதெல்லாம் தி.மு.க., ஆட்சிக்கு வருமோ அப்போதெல்லாம் மக்கள் விரோத ஆட்சியாகவே உருக்கிறது. அதிமுக ஆட்சியில் சொத்து வரி உயர்த்திய போது ரத்து செய்ய வேண்டும் என்று ஸ்டாலின் போராடினார். நாங்களும் திரும்ப பெற்றோம். இந்த அநியாய வரி உயர்வை திரும்ப பெற வேண்டும். இல்லாவிட்டால், தமிழகம் முழுவதும் போராட்டம் வெடிக்கும்’’ இவ்வாறு அவர் பேசினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal