‘பொதுத் தேர்வு மாணவர்களுக்கான இரண்டாம் திருப்புதல் தேர்விலும் வினாத்தாள் ‘லீக்’ ஆனதால் மீண்டும் மாவட்டம் வாரி வினாத்தாள் தயாரிப்பு முறையை அமல்படுத்த வேண்டும்’ என தலைமையாசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பொதுத் தேர்வு எழுதும் பத்து, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வுகளுக்கு மாநிலம் முழுவதும் ஒரே வினாத்தாள் தயாரிக்கப்பட்டது. முதல் திருப்புதல் தேர்வில் திருவண்ணாமலையில் பத்தாம் வகுப்பு வினாத்தாள் வெளியாகி சர்ச்சையானது. தற்போது இரண்டாம் திருப்புதல் தேர்விலும் நேற்று முன்தினம் பிளஸ் 2 கணிதம் வினாத்தாள் வெளியாகியது.

இதனால் நேற்று நடந்த கணிதம் தேர்வை, மாநிலம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் தேர்வுத்துறையே ‘இமெயிலில்’ பகல் 12:00 மணிக்கு வினாத்தாள் அனுப்பி, மதியம் 2:00 மணிக்கு நடத்த உத்தரவிட்டது. பல அரசு பள்ளிகளில் பிரின்டர், ஜெராக்ஸ் வசதி இல்லாததால் மெயிலில் வந்த வினாத்தாளை மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப தனியார் கம்ப்யூட்டர் சென்டர்களில் அவசர கதியில் பிரின்ட் எடுத்தனர். இதனால் வினாத்தாள் விஷயத்தில் மீண்டும் பாதுகாப்பற்ற நிலை நீடித்தது என தலைமையாசிரியர்கள் தெரிவித்தனர்.

அவர்கள் கூறுகையில், “வினாத்தாள் ‘லீக்’ ஆன சம்பவங்களில் கடுமையான நடவடிக்கைகள் எடுப்பதில்லை. இதனால் அடுத்தடுத்து வினாத்தாள் ‘லீக்’ ஆகும் சம்பவம் நடக்கிறது. இதற்கு பதில் மீண்டும் மாவட்டம் வாரியாக வினாத்தாள் தயாரிக்கும் முறையை அமல்படுத்த வேண்டும்” என்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal