உள்ளாட்சித் தேர்தல், நகர்ப்புற தேர்தல் நடந்து முடிந்து பதவியேற்பு விழாவும் நல்லபடியாக முடிந்தது. இந்த நிலையில்தான் பெண் கவுன்சிலர்கள் மற்றும் பெண் மேயர்கள், துணை மேயர்கள், சேர்மன்கள் ஆகியோரது கணவர்கள் ‘ஆக்டிவாக’ அத்துமீறி செயல்படுவதுதான் தி.மு.க.விற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் விதமாக அமைந்திருக்கிறது.

தமிழ்நாடு இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாலின ரீதியாக இவ்வளவு பெரிய சாதனையை படைத்தது பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இப்படிப்பட்ட நிலையில்தான் சரியாக 15 நாட்களுக்கு முன் திமுக எம்பி கனிமொழி கவுன்சிலர்களின் பணிகள் குறித்து முக்கியமான எச்சரிக்கை ஒன்றை விடுத்தார். முதல்வர் ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு நடந்த திமுக விழாவில் பேசிய கனிமொழி,

‘‘பெண் கவுன்சிலர்கள் சிறப்பாக பனி செய்ய வேண்டும். அவர்களின் பணிகளில் குடும்பத்தினர் மூக்கை நுழைக்க கூடாது. பெண் கவுன்சிலர்களை சுயமாக பணி செய்ய விடமால் வீட்டு ஆண்கள் தலையிட கூடாது. வீட்டில் உள்ள கணவர், அப்பா, அண்ணன் ஆகியோர் வேலைகளை பார்த்துக்கொள்வார்கள் என்று பெண் கவுன்சிலர்கள் சும்மா இருந்துவிட கூடாது. உங்களுக்கு அதிகாரம் கிடைத்துள்ளது. அதை நன்றாக பயன்படுத்துங்கள். நீங்கள் இப்போது நன்றாக செயல்பட்டால்தான் வரும் காலத்தில் பெண்களுக்கு மேலும் அதிகாரம் கிடைக்கும்’’ என்று கனிமொழி எச்சரிக்கை விடுத்து இருந்தார்.

பெண்களுக்கு என்று ஒதுக்கப்படும் தொகுதிகளில் அரசியல் ஆண் தலைவர்கள் தங்கள் மனைவிகளை தேர்தலில் நிற்க வைத்து வெற்றிபெற வைப்பார்கள். அதன்பின் அதிகாரபூர்வமாக மனைவி பதவியில் இருந்தாலும் கணவர்தான் நிழல் தலைவராக வலம் வருவார். கையெழுத்து போடுவது மட்டுமே மனைவி மற்ற முடிவுகளை எல்லாம் எடுப்பது கணவர் என்ற நிலையே இருக்கும்.

இதைத்தான் கனிமொழி நடக்க கூடாது என்று எச்சரிக்கை விடுத்து இருந்தார். இந்த நிலையில்தான் சென்னையில் கனிமொழி எச்சரிக்கை விடுத்தது போலவே கவுன்சிலர்கள் பலரின் வீட்டு ஆண்கள் கவுன்சிலருக்கான் பணியை செய்வதாக டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில், பெண் கவுன்சிலர்களில் பலரின் கணவர்கள்தான் கவுன்சிலருக்கான பணிகளை செய்கிறார்கள்.

‘‘இந்த கணவர்களின் அத்துமீறல் சென்னையில் மட்டுமல்ல, மதுரை, கோவை, திருச்சி ஆகிய மாவட்டங்களிலும் அதிகளவில் நடக்கிறது. அதாவது, அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அரசு கார்களில், கணவர்கள் பவனி வருவதுதான் கொடுமையாக இருக்கிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் இதற்கு முற்றுப்புள்ளி வைத்தால்தான்’’ அடுத்தடுத்த தேர்தல்களில் தி.மு.க. ‘அமோக’ வெற்றி பெரும். இல்லாவிட்டால் கேள்விக்குறிதான்’ என்பதுதான் நடுநிலையாளர்களின் கருத்தாக இருக்கிறது!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal