‘ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை’ அதற்கு காரணம், அ.தி.மு.க. ஆட்சியில் ‘கோலோச்சிய’ தி.மு.க.வினர், நன்றிகடனுக்காக, அ.தி.மு.க.வினருக்கு மீண்டும் சலுகைகள் கொடுப்பதாக, திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் போக்குவரத்துப் பணிமனையில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது பற்றி திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் பணிமனையில் பணிபுரியும் எந்தக் கட்சியையும் சாராத ஓட்டுநர்கள், நடத்துநர்கள் சிலரிடம் பேசினோம்.

‘‘சார்… உப்பிலியபுரம் பணிமனையைப் பொறுத்தளவில், கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் போது தி.மு.க. தொழிற்சங்கத்தில் 11 பேர் நிர்வாகிகளாக இருந்தனர். அ.தி.மு.க. தொழிற்சங்கத்தில் 100&க்கு மேற்பட்டோர் இருந்தனர். தற்போது, தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகும் அ.தி.மு.க.வில் கோலோச்சியவர்கள், ‘சொகுசு’ பேருந்துகளில் (லைட் டூட்டி) பணி புரிகின்றனர். காரணம், அ.தி.மு.க.விலிருந்து தி.மு.க. தொழிற்சங்கத்திற்கு மாறி சந்தா கட்டிவிடுகின்றனர்.

இதுமாதிரி நடப்பது சகஜம்தான். அதாவது எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், வேலை சுலபமாக இருந்தால் போதும் என்பதால், ஓட்டுநர், நடத்துநர்கள் சந்தாவை மாற்றிக் கட்டுவது வழக்கம். (நமக்கு எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தால் என்ன..?) ஆனால், தொழிற்சங்க நிர்வாகிகள் அ.தி.மு.க.வில் இருந்தவர்களிடம் அதிகளவில் பணத்தைப் பெற்றுக்கொண்டு லைட் டூட்டி வழங்கியிருப்பதுதான் தற்போது சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.

மேலும் இங்குள்ள ‘ஏழுமலையான்’ பெயர் கொண்ட ஒரு அதிகாரி போடும் ஆட்டத்திற்கு அளவே இல்லையாம்! உயர் அதிகாரியுடன் கைகோர்த்துக்கொண்டு, உப்பிலியபுரம் பணிமனையையே ஆட்டுவித்து வருகிறார். இப்பணிமனைக்கு அவப்பெயர் வந்துவிடக்கூடாது என்று சங்க நிர்வாகி ஒருவர் முயற்சி எடுத்தாலும், ‘தலை’யாக இருக்கும் ஒருவர் உள்குத்துவேலைகளில் ஈடுபடுவதுதான், தொழிலாளர்களை ரொம்பவும் வேதனையில் ஆழ்த்தியிருக்கிறது.

அதாவது, அந்த அதிகாரி சென்னையில் பணியாற்றிய போதே, வேலைவாங்கித் தருவதாக சர்ச்சையில் சிக்கியிருக்கிறாராம். இவர், டெப்போவின் ‘தலை’யை கையில் போட்டுக்கொண்டு கல்லா கட்டி வருகிறாராம். இது தொடர்பாக, அதிகாரிகளுக்கும், தொழிற்சங்க மாவட்ட நிர்வாகிக்கும் பலமுறை புகார்கள் சென்றாலும், ‘அப்படி இங்கு ஏதும் நடக்கவில்லை. அந்த நிர்வாகி ரொம்ப நல்லவர்’ என்று தொழிலாளர்கள் மூலமாகவே மாவட்ட நிர்வாகத்திடம் சொல்ல வைத்து விடுகிறார்களாம். வேறு வழியில்லாமல் நிர்வாகிகள் சொல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார்கள்.

அமைச்சர் கே.என்.நேருவிற்கும் அரசல் புரசலாக தகவல் சென்றிருக்கிறது. அவரது குடும்ப திருமண நிகழ்வுக்கு பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று இருக்கிறாராம்.அதற்குள் அமைச்சரிடம் தவறான தகவலை கொண்டு செல்ல ‘ஒருவர்’ மூலம் சில காய்களை நகர்த்தி விட்டார்களாம். அ.தி.மு.க. ஆட்சியில் ‘கோலோச்சிய’ தி.மு.க. நிர்வாகிகளை, உளவுத்துறையின் மூலம் கண்டுபிடித்து களையெடுத்தாலே, உண்மையான தி.மு.க. நிர்வாகிகள் நிம்மதியாக இருப்பார்கள். அவர்கள் கட்டும் கரைவேட்டிக்காவது உண்மையாக இருக்க வேண்டும்’’ என்றனர்.

‘‘சமீபத்தில் உணவுத்துறையில் ஐந்தண்டுகளுக்கு மேல் பணியாற்றும் அதிகாரிகளை அமைச்சர் அர.சக்கரபாணி கூண்டோடு மாற்றியிருக்கிறார். அதே போல், உப்பிலியபுரம் பணிமனையில் ஐந்தாண்டுகளுக்கு மேலாக கோலோச்சும், அந்த அதிகாரி மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என்ற குரலும் ஒலிக்கிறது.

திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் பணிமனையில் நடப்பதை, அந்த ‘ஏழுமலையான்’ எப்படிப் பார்த்துக்கொண்டிருக்கிறார் என்பதுதான் ஒவ்வொருவர் மனதிலும் கேள்வியாக எழுகிறது.

நகர்ப்புற தேர்தலில் பிற மாவட்டங்களில் நடந்த உள்குத்துகளை கண்டறிய, சென்னையிலிருந்து நிர்வாகிகளை நியமித்து, எப்படி உண்மைத் தண்மையை முதல்வர் ஆராய்ந்தாரோ, அதே போல் மேலிடத்தில் இருந்து அனுப்பினால், உப்பிலியபுரம் பணிமனையில் நடப்பது வெட்ட வெளிச்சமாகிவிடும்! அதற்கு தொழிலாளர்களை மனம் திறந்து பேசவிடவேண்டும் என்பதுதான் தற்போதைய கோரிக்கையாக இருக்கிறது!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal