முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியின் கோட்டையில் தி.மு.க. கொடி பறக்கத் தொடங்கியிருக்கிறது. இதற்கு காரணம், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவின் தேர்தல் வியூகம்தான் என்கின்றனர் நடுநிலையாளர்கள்

சேலம் மாவட்டத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் வாக்கு எண்ணிக்கை 16 மையங்களில் நடைபெற்று வருகிறது. சேலம் மாவட்டத்தில் கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. 10 தொகுதிகளை வென்றது. ஒரு தொகுதியில் மட்டுமே தி.மு.க. வெற்றி பெற்றது. இந்த முறை உள்ளாட்சி தேர்தலில் அதிகமான இடங்களை தி.மு.க. கைப்பற்றி வருகிறது.

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த தொகுதியான எடப்பாடி பகுதியில் எடப்பாடி நகராட்சி, அரசிராமணி, பூலாம்பட்டி பேரூராட்சிகள் உள்ளன. இதில் 15 வார்டுகள் கொண்ட அரசிராமணி பேரூராட்சியில் அதிக இடங்களில் தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. எடப்பாடி நகராட்சி, பூலாம்பட்டி பேரூராட்சியிலும் அதிக இடங்களில் தி.மு.க. முன்னிலையில் உள்ளது.

சேலம் மாநகராட்சியை பொறுத்தவரையிலும் அதிக இடங்களில் தி.மு.க. முன்னிலையில் உள்ளது. மாநகராட்சி பகுதியில் சேலம் தெற்கு தொகுதியில் கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வும், சேலம் மேற்கு தொகுதியில் அ.தி.மு.க கூட்டணியில் இடம் பெற்ற பா.ம.க.வும் வெற்றி பெற்று இருந்தன. இந்த பகுதிகளில் உள்ள மாநகராட்சி வார்டுகளிலும் தற்போது தி.மு.க. முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal