அகமதாபாத் தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் 49 பேர் குற்றவாளிகளாக அறிவித்து நீதிபதி ஏ.ஆர்.பட்டேல் தீர்ப்பு வழங்கினார். இதில் 38 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது.
கடந்த 2008-ம் ஆண்டு ஜூலை 26-ந்தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பல்வேறு இடங்களில் 1 மணி நேரத்தில் 21 குண்டுகள் வெடித்தன. இந்த தொடர் குண்டு வெடிப்பில் 51 பேர் பலியானார்கள். 200-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
குஜராத்தில் கடந்த 2002-ம் ஆண்டு நடந்த ரெயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து நடைபெற்ற கலவரத்தில் நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டதற்கு பழி வாங்கும் விதமாக இந்திய முஜாஹிதீன் பயங்கரவாதிகள் குண்டு வெடிப்பு தாக்குதலை நிகழ்த்தியதாக குற்றம் சாட்டப்பட்டது.
இந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக மொத்தம் 35 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்திய முஜாஹிதீன் அமைப்புடன் தொடர்புடைய 82 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களில் ஒருவர் குற்றத்தை ஒப்புக் கொண்டார். 4 பேருக்கு எதிராக இதுவரை வழக்கு விசாரணை தொடங்கவில்லை. அவர்களை தவிர 77 பேருக்கு எதிராக அகமதாபாத் சிறப்பு கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் 49 பேர் குற்றவாளிகளாக அறிவித்து நீதிபதி ஏ.ஆர்.பட்டேல் தீர்ப்பு வழங்கினார். மேலும் 28 பேர் விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், இந்த தீர்ப்பு மீதான தண்டனை விவரங்கள் இன்று அகமதாபாத் சிறப்பு நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.
இதில், 49 குற்றவாளிகளில் 38 பேருக்கு தூக்கு தண்டனையும், 11 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து அகமதாபாத் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.