கடந்த சில தினங்களுக்கு முன்பு, தி.மு.க.வினரை அச்சில் ஏற்றமுடியாத வார்த்தைகளால் அர்ச்சனை செய்தார் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம். இந்த நிலையில் தற்போது ‘எனது உயிருக்கு ஆபத்து’ என்று பகீர் கிளப்பியிருக்கிறார்.

திண்டிவனம் நகராட்சியில் போட்டியிடும் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து காந்தி சிலை அருகே இன்று நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது பேசிய அவர், ‘‘கடந்த 2006-ம் ஆண்டு என் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஈடுபட்டதாக கூறப்படுபவர், தான் இருந்த கட்சியில் இருந்து மாறி தற்போது தி.மு.க.வில் இணைந்து தனது மனைவிக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு பெற்றுள்ளார்.

எனக்கு தரப்பட்ட போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது. எனவே என்னை கொல்ல மீண்டும் சதி நடைபெறுகிறதோ என்று நினைக்கிறேன். இந்த தேர்தலை பொறுத்தவரை ஓட்டுக்கு ரூ.5 ஆயிரம் வரை தரப்படுகிறது. தி.மு.க.வின் ஏவல்துறையாக செயல்படும் காவல்துறையினர் காக்கிச்சட்டையை கழற்றிவைத்துவிட்டு அந்த கட்சிக்காக பணம் விநியோகம் செய்து வருகின்றனர். இதற்கு தேர்தல் கமி‌ஷனும் உடந்தையாக உள்ளது.

எனவே பொதுமக்கள் இந்த தேர்தலில் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு வாக்களித்து உள்ளாட்சியில் நல்லாட்சி மலர ஒத்துழைக்க வேண்டும்’’இவ்வாறு அவர் பேசினார்.

சமீபத்தில் தி.மு.க.வை கடுமையாக விமர்சித்த சி.வி.சண்முகம், காவல்துறையையும் விட்டுவைக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal