குடும்பத் தலைவிக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தேர்தல் சமயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார். பொருளாதார நெருக்கடியால், இதனை செயல்படுத்துவதில் தாமதம் ஏற்படுகிறது.

தற்போது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதையொட்டி, ஆயிரம் ரூபாய்க்கான விண்ணப்பத்தை தி.மு.க.வினர் சில குடும்பங்களுக்கு கொடுத்து வாக்கு கேட்பதாகவும், முதல்வரின் புகைப்படத்தோடு பொய்யான முறைகேடு நடப்பாதாக, டாக்டர் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டியிருக்கிறார்.

இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் செய்துள்ள ட்விட்டில், ‘‘தமிழக அரசின் சார்பில் குடும்பத் தலைவிகளுக்கான ரூ.1000 உரிமைத் தொகை விண்ணப்பம் என்ற பெயரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் புகைப்படம் அச்சிடப்பட்ட விண்ணப்பங்கள் தமிழகம் முழுவதும் வினியோகிக்கப்பட்டு வருகின்றன. அவை அரசு விண்ணப்பமாகத் தெரியவில்லை. குடும்பத்தலைவிகளுக்கான உரிமைத் தொகை வழங்கும் திட்டம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

பயனாளிகள் தேர்வுக்கான வழிமுறைகள் அறிவிக்கப்படவில்லை; விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அரசு சார்பில் அறிவிப்பு வெளியிடப்படவில்லை. இத்தகைய சூழலில் பொதுமக்களுக்கு ஒரு தரப்பினர் விண்ணப்பத்தை வினியோகித்து வருகின்றனர். அதன் பின்னணியில் முறைகேடு செய்யும் நோக்கம் இருக்கலாம்.

இந்த மோசடிக்கு முதலமைச்சரின் பெயர் பயன்படுத்தக்கூடாது; விண்ணப்ப வினியோகத்தை தடுக்க வேண்டும். குடும்பத் தலைவிகளுக்கான உரிமைத் தொகை விண்ணப்பம் வினியோகிக்கப்படுவது அரசுக்கு தெரியுமா? அவை உண்மையா, போலியா? என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும். மோசடியாக வினியோகிப்பவர்களை கைது செய்ய வேண்டும்’’ என்று அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த விவகாரம் முதல்வருக்கு தெரியுமா..? என்று சாதாரண பொதுஜனங்களும் தற்போது கேள்வி எழுப்பி வருகின்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal