கடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றாலும், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு முழு திருப்தி இல்லை. காரணம், கொங்குமண்டலம் மற்றும் தர்மபுரியில் தி.மு.க. பெரும் சரிவை சந்தித்தது.

இந்த தோல்வியினை சரிகட்ட, நடக்கப்போகும் உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. அந்த இடங்களில் வெற்றி பெற்றாக வேண்டும் என்று கணக்குப்போட்டு காய்நகர்த்தி வருகிறார் ஸ்டாலின். ஆனால், முதல்வர் ஸ்டாலினின் வியூகத்திற்கு செந்தக் கட்சியினரே முட்டுக்கட்டை போடுவதால், கடும் எரிச்சலில் இருக்கிறார். அதோடு, அவர்கள் மீது அதிரடி நடவடிக்கை எடுக்கவும் தயாராகி வருவதாக அறிவாலயத்தில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கிறது.

இது பற்றி மூத்த உடன் பிறப்புக்களிடம் பேசினோம். ‘‘நகர்ப்புறஉஊரக நகராட்சி தேர்தலில், திமுக தலைமை அறிவித்த வேட்பாளர்களுக்கு எதிராக, பல இடங்களில் அக்கட்சி நிர்வாகிகள் சுயேட்சையாக வேட்பு மனுதாக்கல் செய்வதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இதனால் அதிகாரப்பூர்வ வேட்பாளர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.. இதற்கு ஒரு உதாரணம் சொல்ல வேண்டுமானால், திருச்சியில் 54வது வார்டில் போட்டியிட முன்னாள் கவுன்சிலர் ராமமூர்த்திக்கும், தலைமை பொதுக்குழு உறுப்பினர் மூவேந்தனுக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டது.

இரண்டு பேருமே விட்டுகொடுக்க முன்வராத நிலையில், இவர்களுக்குப் பதிலாக வட்டச் செயலாளர் புஷ்பராஜ் என்பவர் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதனால் அதிருப்தியடைந்த ராமமூர்த்தி சுயேட்சையாக வேட்பு மனுத்தாக்கல் செய்து விட்டார். இப்படி எத்தனையோ மாவட்டங்களில் திமுகவுக்கு எதிராக நிர்வாகிகள் களமிறங்கி உள்ளதாக செய்திகள் கசிந்து கொண்டிருக்கின்றன. அதனால் மறுபடியும் முதல்வர் ஸ்டாலின் கையில் சவுக்கை எடுத்துள்ளார். வேட்புமனுக்கள் வாபஸ் பெறுவதற்கு இன்று கடைசி நாள் ஆகும்.. இன்று மாலை இறுதி வாக்காளர்கள் பட்டியல் ரிலீஸ் ஆகும்.

இந்த நிலையில், திமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களுக்கு எதிராக போட்டி வேட்பாளர்கள் களமிறங்குகிறார்களா? அப்படி போட்டியிட்டால் அவர்களை பற்றிய முழு விபரத்தினையும் அறிவாலயத்துக்கு இன்று இரவுக்குள் அணுப்பி வைக்குமாறு மாவட்ட திமுக பொறுப்பாளர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் திமுக தலைமை உத்தரவிட்டிருக்கிறதாம். இது குறித்து ஒவ்வொரு மாவட்டத்திலும் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்கள் திமுக மாவட்ட செயலாளர்கள்.

இந்த விஷயம் அறிந்த கூட்டணி கட்சிகள், “கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு எதிராக திமுகவினர் போட்டி வேட்பாளர்களாக களமிறங்கினால் திமுக ஆக்‌ஷன் எடுக்குமா? அட்லீஸ்ட் எங்க குறையை கேட்கவாவது அறிவாலயம் காது கொடுக்குமா?” என்று ஆதங்கத்துடன் சொல்கிறார்களாம். திமுகவில் அணிவகுத்துள்ள அதிருப்தி வேட்பாளர்களால், அதிமுக தரப்பு செம குஷியில் உள்ளதாம். சட்டமன்ற தேர்தலில் விட்டதை இந்த மாநகராட்சி தேர்தலில் ஈடு செய்வோம் என்று சொல்லி வருகிறார்கள்’’ என்றனர்.

‘அதிருப்தி வேட்பாளர்கள் வெற்றி பெற்று, சுயேட்சையாக இருப்பதால் எந்தவித பிரயோஜனமும் கிடையாது.. அவர்கள் வெற்றிப் பெற்ற பிறகு, எப்படியும் மறுபடியும் திமுகவிற்கே வந்துவிடுவார்கள்.. அதனால் மேயர் பதவியை திமுக கைநழுவி விட வாய்ப்பே இல்லை’ என்றும் ஒரு தரப்பில் சொல்லி வருகிறார்கள். ஆனால், அதிருப்தி வேட்பாளர்கள் போட்டியாக களம் காண்பவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கத் தயாராகி வருகிறாராம் முதல்வர்1

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal