அதிமுக செல்வாக்கு அதிகம் உள்ள தொகுதியாக அறியப்படும் தாராபுரம் தொகுதியில் வெற்றியை பெறப்போவது யார்? என்பது தொடர்பாக பிரபல மாலை நாளிதழான மாலைமலர் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பை நடத்தியது. இதில் ஆளும் தவெகவை திமுக முந்துவதாக தெரிவித்துள்ளது.

தாராபுரம், மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. மொத்தம் தாராபுரத்தில் 80.31 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த பொதுத்தேர்தலுடன் ஒப்பிடும் போது வாக்குப்பதிவு 9.36 சதவிகிதம் குறைவாக உள்ளது. இதனால், இந்த தொகுதியில் வெற்றி பெற போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
பிரபல நாளிதழான மாலைமலர் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதன் அடிப்படையில் தாராபுரத்தில் திமுகவுக்கும் தவெகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவும் என்று தெரியவந்துள்ளது. கருத்துக்கணிப்பு முடிவின் படி, தவெகவை திமுக முந்தி வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக மூன்றாம் இடத்திற்கு தள்ளப்படுமெனவும் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கருத்து கணிப்புப்படி பார்த்தால் தவெகவுக்கு தேர்தல் முடிவில் பெரும் அதிர்ச்சி காத்திருக்கிறது என்றே சொல்லலாம். மதுராந்தகம் தொகுதியை பொறுத்தவரை தவெக வேட்பாளர் வெற்றி பெறுவார் எனவும் இரண்டாவது இடத்தை பிடிப்பதில் திமுகவிற்கும் தவெகவிற்கும் இடையே கடும் போட்டி நிலவும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
இரண்டு தொகுதிகளில் பதிவான வாக்குகள் வரும் 9 ஆம் தேதி எண்ணப்படுகின்றன. அப்போது யாருக்கு வெற்றி என்பது தெரிந்துவிடும்!
