தமிழக அளவில் நடைபெற்ற இண்டியா கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் ஆளும் தவெக பங்கேற்றது. இந்தக் கூட்டத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாருக்கு எதிராக அக்டோபர்13, 14, 15-ம் தேதிகளில் தொடர் போராட்டம் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இண்டியா கூட்டணியில் உள்ள தமிழக கட்சிகளின் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தலைமையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் தவெக சார்பில் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, மரிய வில்சன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விசிக தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயற்குழு உறுப்பினர் ஜி.ஆர்.ரவீந்திரநாத், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலப் பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் ஆகியோர் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் , ‘‘இண்டியா கூட்டணியில் இணைந்து பணியாற்ற முன்வந்துள்ள தவெகவை கூட்டணிக் கட்சிகள் மனப்பூர்வமாக வரவேற்கின்றன. இந்த அரசியல் முடிவை எடுத்த முதல்வர் விஜய்க்கு மனமார்ந்த பாராட்டுகள். சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) என்ற பெயரில் நாடாளுமன்ற ஜனநாயகத்தைச் சீர்குலைக்கும் வகையிலும், தகுதியான 13 கோடி வாக்காளர்களின் வாக்குரிமையைப் பறிக்கும் வகையிலும் செயல்படும் தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கும், அதன் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கும் கடும் கண்டனம்.

தேர்தல் ஆணையத்தைக் கருவியாகப் பயன்படுத்தி ஜனநாயகத்துக்கு எதிராகச் செயல்படும் பிரதமர் மோடி, அமைச்சர் அமித் ஷா கூட்டணியைக் கண்டிப்பதோடு, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

ஜனநாயகப் படுகொலையை மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில், ‘ஜனநாயகத்தைக் காப்போம்’ என்ற பெயரில் அக்.13, 14-ம் தேதிகளில் தமிழகத்தின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் இண்டியா கூட்டணிக் கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இதன் தொடர்ச்சியாக, 15-ம் தேதி சென்னை மாவட்டத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இதில் தமிழக இண்டியா கூட்டணியின் முன்னணித் தலைவர்கள் அனைவரும் பங்கேற்பார்கள்’’ உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்தக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த மாநில காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் கூறியதாவது: ஆர்எஸ்எஸ், பாஜக, அமித் ஷா மற்றும் பிரதமர் மோடியின் அட்டூழிய ஆட்சியை எதிர்த்து யாரெல்லாம் நிற்கிறீர்களோ, அவர்கள் அனைவரும் இண்டியா கூட்டணிக்கு வாருங்கள். இது 2023-ம் ஆண்டில் இருந்தே நாங்கள் தொடர்ந்து நடத்தி வருகின்ற சண்டை.

தமிழகத்தில் இண்டியா கூட்டணி மிக வலுவாக உள்ளது. வரும் 6-ம் தேதி டெல்லியிலும் எங்கள் போராட்டம் தொடரும். எம்.பி.கள் அனைவரும் தேர்தல் ஆணைய அலுவலகத்தை நோக்கிப் பேரணியாகச் சென்று அங்கு மாபெரும் ஆர்ப்பாட்டம் செய்ய உள்ளோம். களத்தில் பாஜக, ஆர்எஸ்எஸ் மற்றும் ஞானேஷ்குமாரின் கூட்டணியை எதிர்த்து நாங்கள் உறுதியோடு நிற்கிறோம். இவ்வாறு மாணிக் கம் தாகூர் தெரிவித்தார்.

‘இண்டியா’ கூட்டணி கூட்டத்தில் த.வெ.க. பங்கேற்றிப்பது ‘மேலிட’ பா.ஜ.க.வை எரிச்சலடைய வைத்திருக்கிறதாம். இது பற்றி டெல்லி வட்டாரத்தில்¢ பேசிய போது, ‘‘தங்களுக்கு ஆபத்து என்றால் வந்து சரணடைகிறார்கள்… ஆனால், காங்கிரஸ் பக்கம் சேர்ந்துகொண்டு எங்களுக்கே எதிராக செயல்படுவதா? இதற்கு விரைவில் ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்’ என பா.ஜ.க. தலைமை முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது’’ என்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal