முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு எதிரான 4 கோடி ரூபாய் மோசடி புகாரில் முகாந்திரம் இல்லை என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதை ஏற்று, இது தொடர்பான வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் முடித்து வைத்தது. இந்த நிலையில்தான் பாதிக்கப்பட்டவருக்காக ‘முத்தரையர் அரசியல் களம்’ களத்தில் இறங்கியிருப்பதுதான், விராலிமலை இடைத்தேர்தலில் விஜயபாஸ் வெல்வாரா? என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியைச் சேர்ந்த தனவிமல் தாக்கல் செய்துள்ள மனுவில், சட்டப்பேரவைத் தேர்தலில் புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்திருந்த தன்னை தொடர்பு கொண்ட முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், தேர்தல் செலவுகளை மேற்கொள்ளும் தகுதியை நிரூபிக்க 5 கோடி ரூபாய் தரும்படி வலியுறுத்தியதாகவும், வேட்பாளர் பட்டியல் அறிவித்ததும் பணத்தை திருப்பித் தந்து விடுவதாக உறுதியளித்ததாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்.
அதன்படி, 4 கோடியே 50 லட்சம் ரூபாயை திரட்டி, சி.விஜயபாஸ்கர் குறிப்பிட்ட ஒப்பந்ததாரர் சோத்துப்பாலை முருகேசன் என்பவரிடம் கொடுத்ததாகவும், வேட்பாளர் பட்டியலில் தனது பெயர் அறிவிக்கப்பட்ட பின், தேர்தல் செலவுகளுக்காக பணத்தை திருப்பி கேட்டபோது, 50 லட்சம் ரூபாய் மட்டுமே திருப்பி தந்ததாகவும், மீதமுள்ள தொகையை தராமல் இழுத்தடித்ததாகவும் மனுவில் குற்றம் சாட்டியுள்ளார்.
தற்போது சி.விஜயபாஸ்கர், ஆளும் தவெகவில் இணைந்துள்ள நிலையில், பணத்தை திருப்பி கேட்ட போது மிரட்டல் விடுத்ததாகவும், இது சம்பந்தமாக புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.தனது புகார் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன், மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, காவல் துறை தரப்பில், மனுதாரர் புகார் குறித்து புதுக்கோட்டை டிஎஸ்பி நடத்திய விசாரணையில், முன்னாள் அமைச்சருக்கு எதிரான புகாரில் முகாந்திரம் இல்லை என தெரிய வந்துள்ளதாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி, புகார் குறித்து விசாரணை நடத்தக் கோரிய மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டார்.
இந்த நிலையில்தான் ‘முத்தரையர் அரசியல் களம்’ எனும் இயக்கத்தை நடத்தி வரும் கே.பி.எம்.ராஜா, ‘‘ஆலங்குடி முத்தரையர் வேட்பாளர் தனவிமலிடம் ரூ.4 கோடி ஏமாற்றிய விராலிமலை விஜயபாஸ்கரே… தமிழக அரசு கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை தப்பிக்க வைக்கலாம்… விராலிமலை தொகுதியில் 88 ஆயிரம் வாக்காளர்கள் முத்தரையர் காவல்காரன் சமூகம் உங்களை ஒருபோதும் தப்பிக்க வைக்காது’’ என பதிவிட்டிருக்கிறார்.
இந்தப் பதிவுதான் புதுக்கோட்டை மாவட்ட அரசியலில் புயலைக் கிளப்பியிருக்கிறது. இது பற்றிய விசாரணையில் இறங்கினோம். ‘‘சார், முத்தரையர் சமுதாயத்திற்கு என பல இயக்கங்கள், அமைப்புகள் செயல்பட்டாலும் ஏதோவொரு கட்சி சார்ந்து செயல்படுகிறது. ஆனால், முத்தரையர் சமுதாய மக்களின் நலனுக்காகவே ‘முத்தரையர் அரசியல் களம்’ எனும் இயக்கத்தை தொடங்கி நடத்தி வருகிறார்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதியில் த.வெ.க. வேட்பாளர் வெற்றி பெறுவதற்கு கே.பி.எம்.ராஜா முக்கியக் காரணமாக அமைந்துவிட்டார். காரணம், திருப்பத்தூர் தொகுதியைப் பொறுத்தளவில் தி.மு.க., அ.தி.மு.க. என மாறி மாறி முத்தரையர் சமுதாய மக்கள் ஆதரவு கொடுத்து வந்தனர். கடந்த தேர்தலில் ‘முத்தரையர் அரசியல் களம்’ சார்பில் களம் கண்டு, கணிசமான வாக்குகளை கே.பி.எம்.ராஜா பிரித்ததால், அந்த தொகுதியில் குறுநில மன்னராக வலம் வந்த பெரியகருப்பன் தோல்வியைத் தழுவினார். எனவே, விராலி மலை தொகுதியில் விஜயபாஸ்கருக்கு எதிராக முத்தரையர்கள் வாக்களித்தார் அவர் பெற்றி பெறுவது எளிதல்ல!’’ என்றனர்.
