சமீபத்தில் த.வெ.க. அமைச்சர் ஒருவர் அரசுப் பள்ளி மாணவியிடம் ‘ஆங்கிலத்தில்’ பேசி அச்சுறுத்திய வீடியோ வைரலாகி பள்ளிகளில் சம்பந்தமில்லாத அமைச்சர்கள் ஆய்வு செய்யவேண்டாம் என உத்தரவு வந்தது. இந்தநிலையில்தான் நள்ளிரவில் த.வெ.க. எம்.எல்.ஏ. ஓருவர் அரசு மருத்தவமனையில் ஆய்வு செய்தது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அரசு மருத்துவமனையில் ஸ்ரீவைகுண்டம் தவெக எம்எல்ஏ அன்னை சரவணன் நள்ளிரவில் ஆய்வு நடத்தினார். அங்கு மருத்துவர் தனது அறையில் உள்ளே தூங்கி கொண்டிருந்தார். அவரை செவிலயரின் செல்போன் மூலம் அழைத்து, வெளியே வரவைத்த அன்னை சரவணன், அவருக்கு அறிவுரை வழங்கிவிட்டு சென்றார். இந்த செயலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து நெட்டிசன்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

அரசியல் பார்வையாளர் ஒருவர் வெளியிட்ட பதிவில், ‘‘பணியில் இருக்கும் மருத்துவர் மருத்துவமனையின் இரவுக்காவலர் அல்ல. நோயாளிகள் யாரும் காத்திருக்கவில்லை என்றால், அவர் தனது அறையில் உறங்கிக்கொண்டிருப்பார். நோயாளி ஒருவர் வரும்போது, செவிலியரோ அல்லது பிற பணியாளர்களோ கதவைத் தட்டியோ அல்லது அழைத்தோ அவரை எழுப்புவார்கள். இதுதான் வழக்கமான நடைமுறை. தயவுசெய்து இந்த சட்டமன்ற உறுப்பினரிடம் இதைத் தெரிவியுங்கள்’’ என்றார்

திமுக முன்னாள் எம்பி செந்தில்குமார் வெளியிட்ட பதிவில், ‘‘கடுமையாகக் கண்டிக்கத்தக்கது. இரவுப் பணியில் உள்ள மருத்துவரின் பணி மற்றும் பொறுப்புகளில் டி.வி.கே எம்.எல்.ஏ தலையிட்டது முற்றிலும் தேவையற்றது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத செயலாகும். அரசியல் தலையீட்டிற்கு எதிராக இந்திய மருத்துவச் சங்கம் மற்றும் பிற மருத்துவர் சங்கங்கள் வலுவான அறிக்கையை வெளியிட வேண்டும்’’என்று கூறியுள்ளார்.

நெட்டிசன் ஒருவர் வெளியிட்ட பதிவில், ‘‘மா சுப்பிரமணியன், காலையில் லேட்டாக வர்றவங்கள கேள்வி கேட்டதுக்கு. தாம் தூம்னு குதிச்ச மருத்துவர்கள், இப்போது இங்கே பணி மருத்துவர் நள்ளிரவில் ஏன் தூங்குறாருனு ஒரு எம்எல்ஏ பிரச்சனை பண்ணிருக்காரு’’ என்று விமர்சித்துள்ளார். இன்னொரு நெட்டிசன் கூறுகையில், ‘‘இரவு பணியில் இருப்பவர்கள் நோயாளி இல்லாத நேரம் தூங்குவது இயல்பு, நள்ளிரவில் திடீர் என்று ஆய்வு பண்றேன் என்று எம்.எல்.ஏ. செல்வது எதனால்?’’ என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

அடுத்தது ‘‘தயவுசெய்து மருத்துவர்களின் பணிச்சுமையைப் புரிந்துகொள்ள முயற்சிக்கவும்; பணியாளர் பற்றாக்குறை மற்றும் நோயாளிகளின் வருகையைப் பொறுத்து, சில சமயங்களில் அவர்கள் 36 மணிநேரப் பணிநேரத்தைக் கூட மேற்கொள்ள வேண்டியுள்ளது. முதலாவதாக, சட்டமன்ற உறுப்பினர்களும் பிற அரசியல் தலைவர்களும் ஏன் தணிக்கை மற்றும் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்? அத்தகைய ஆய்வுகளை மேற்கொள்வதற்காகவே ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது. யாராவது அவர் வீட்டுக்குச் சென்று அவரை எழுப்பி, “உங்கள் தொகுதியில் இவ்வளவு பிரச்சினைகள் இருக்கையில், நீங்கள் எப்படித் தூங்கிக்கொண்டிருக்கிறீர்கள்?” என பதிவுகள் வெளியாகி, எம்.எல்.ஏ.வுக்கு கடும் கண்டனங்கள் பதிவாகி வருகிறது.

அதேநேரம் தவெக எம்எல்ஏ அன்னை சரவணனுக்கு ஆதரவாகவும் சிலர் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal