தி.மு.க. தலைமையும், இரண்டாம் கட்டத் தலைவரும் பெண்கள் குறித்து வக்கிரமாகப் பேசுவதையும், தனது தாயார் குறித்து ஆபாசமாகப் பேசியதையும் மதுராந்தகம் தேர்தல் பிரச்சாரத்தில் கண்டித்து ஆவேசமாகப் பேசினார். அதேபோல், அ.தி.மு.க.வில் உள்ள எம்.ஜி.ஆர். தொண்டர்களுக்கு ‘நான் இருக்கிறேன்’ என தைரியம் கொடுத்திருக்கிறார் விஜய்!

தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளில் இடைத் தேர்தல் நடைபெறுகிறது. வரும் அக்டோபர் 6ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற இருக்கும் நிலையில், அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அந்த வகையில், முதலமைச்சரும், தவெக தலைவருமான விஜய் இன்று மதுராந்தகம் தொகுதியில் அக்கட்சி சார்பில் போட்டியிடும் மரகதம் குமரவேலை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

பிரச்சாரத்தில் முதலமைச்சர் விஜய் பேசியதாவது; “நான் இன்று முதலமைச்சராக வரவில்லை. இடைத் தேர்தலுக்காக வாக்குக் கேட்டு வந்திருக்கிறோம். அன்று ஜெயலலிதாவை, இதே ஸ்டாலின் பேசியது இன்றும் சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது. இதனை எல்லாம் மக்கள் மிகவும் உன்னிப்பாக கவனித்துவருவது எனக்கு தெரியும். இதற்கு மறைமுகமாக ஆதரவு தெரிவிப்பது மற்றவர்கள் (அதிமுக).

ஜெயலலிதாவையே தவறாக பேசியவர்களுடனே சேர்ந்து ஆட்சி அமைக்க அவர்கள் திட்டமிட்டபோதே, அவர்களின் முகமுடி கிழிந்துவிட்டது. தவெகவுக்கு நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு வாக்கும், பெண்களை அவதூறாக, அசிங்கமாக, ஆபாசமாக பேசுபவர்களுக்கு கொடுக்கும் பதிலடியாக இருக்கும். பாஜகவின் பிராஞ்சாக இருந்த மற்றவர்கள் தற்போது திமுகவின் கிளைக் கழகமாக மாறிவிட்டது. ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்களும், ஐ.யு.எம்.எல் சட்டப்பேரவையிலும் அதிமுக – திமுக கூட்டணியை சொன்னார்கள்.

சட்டமன்றத்தில் ஊழல் என சொன்னதும், ஆதாரத்தை காட்டு என்பார்கள். ஆதாரத்தை காட்டினால் நீதிமன்றத்தில் ப்ரூவாகவில்லை என பேசுவார்கள். ஊழல் செய்தவர்களை விடமாட்டோம். இதுவரை ஊழலே செய்ததில்லை எனவும், மக்கள் பணத்தை இனி தொடவே மாட்டோம் என உங்களால் சொல்ல முடியுமா? அரசியலுக்கு வருவதற்கு முன் உங்கள் சொத்து கணக்கு என்ன? அதன் பிறகு உங்களின் சொத்து கணக்கு என்ன என்று சொல்ல முடியுமா?

இதுவரை திமுக – தவெகவுக்கும் இடையேதான் போட்டி என நான் மட்டும்தான் சொல்லிவந்தேன். ஆனால் தற்போது திமுகவே எங்களுக்கும் தவெகவுக்கும் இடையேதான் போட்டி என சொல்ல தொடங்கியுள்ளனர். நமது கேள்வி எப்போதும், ஸ்டாலினுக்கு மட்டும்தான். தேர்தலுக்கு முன் ஒரு கணக்கு போட்டீர்கள், தற்போது எப்படி குறுக்கு வழியில் சென்று ஆட்சியை கலைக்கலாம் என கணக்கு போடுகிறீர்கள். ஆனால், அது எதுவும் நடக்காது.

ஆட்சி அமைத்தபோது, கடன் நிறைய இருக்கிறது எனவே அவகாசம் வேண்டும் என்று கேட்டேன். ஆனால் தற்போது விஜயும் கடன் வாங்குகிறார் என்றார்கள். நான் கொள்ளை அடிக்க கடன் வாங்கவில்லை. மக்கள் நல திட்டங்களை கொஞ்சமாவது செய்யவே கடன் வாங்கியுள்ளேன். ஆறு சிலிண்டர் கொடுப்பேன் எனத் தெரிவித்துவிட்டு, தற்போது மூன்று சிலிண்டர் தானே கொடுக்கிறார் என கேள்வி கேட்கிறார்கள்.

பரந்து விவகாரத்தில் சென்னை பாதிக்கக்கூடாது, நீர் நிலைகள் பாதிக்கக்கூடாது, விவசாயிகள் பாதிக்கக்கூடாது என முடிவு எடுத்தோம். பால் கொள்முதல் விலையை ஐந்து வருடத்தில் நிறைவேற்றுவோம் என தெரிவித்து, மூன்றே மாதத்தில் நிறைவேற்றியுள்ளோம். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவும் வார்த்தைக்கு வார்த்தை தீயசக்தி என சொன்ன திமுகவுடன் சேர்ந்து கூட்டணி அமைக்க முடிவு செய்தால், அவர்களின் தொண்டர்களின் மனதில் எவ்வளவு வலியிருந்திருக்கும். அதேபோல்தானே இந்தத் தொகுதி மரகதமும் மனவலியில் இருந்தார்.

திமுகவுக்கு நம் மீது எந்தக் குற்றச்சாட்டையும் முன் வைக்க முடியாத நிலையில், என் தாயை தவறாக பேசியபோதும் கூட நான் பொறுத்துக்கொண்டேன். ஆனால், எனக்கு அன்பு காட்டும், தமிழ்நாட்டு அக்கா, தங்கைகள், அம்மாக்களை தவறாக பேசுவதை இனி பொறுத்துக்கொள்ள முடியாது. இன்னும் கொடூரமான ஒரு விஷயம் இங்கு நடந்துவருகிறது. அதுகுறித்து இங்கு பேசவேண்டாம் என நினைத்தேன். ஆனால், பேச வேண்டும். கடந்த ஆட்சியில் வந்த புகாரை மூடி மறைத்துவிட்டார்கள். ஆனால், என்ன டீலிங்கில் மூடி மறைத்தீர்கள். தமிழ்நாடு கேட்கிறது வாயை திறங்கள் ஸ்டாலின் சார். நாம் வந்து அவனை உள்ளே தூக்கிவைத்துவிட்டோம். பச்ச குழந்தைகளை சீரழித்தவனை பற்றி பேச முடியவில்லை என்றால் என்ன அரசியல் செய்கிறீர்கள். எனவே அவர்களுக்கு நீங்கள் பாடம் புகுட்ட வேண்டும்” இவ்வாறு பேசினார்.

ஆக மொத்தத்தில், விஜய்யின் இன்றைய மதுராந்தகம் தேர்தல் பிரச்சாரத்தில் தி.மு.க.விற்கு எதிராக பெண்கள் வாக்குகளை விசிலுக்கு திருப்பியதோடு, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா தொண்டர்களையும் த.வெ.க.வுக்கு ஆதரவளிக்க வைத்திருக்கிறார்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal