தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடைபெறுவதாக காவல்துறைக்கு புகார்கள் வந்தன. இந்தப் புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் கடந்த 22ம் தேதி இரவு கும்பகோணம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செயல்பட்டு வரும் பல்வேறு அழகு நிலையங்களில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, சாரங்கபாணி தெற்கு வீதியில் செயல்பட்டு வரும் ஒரு அழகு நிலையத்தில் காவல்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது, அங்கு பாலியல் தொழில் நடைபெறுவது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அங்கு இருந்த நான்கு பெண்களை காவல்துறையினர் மீட்டு, திருச்சியில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர். இதேபோன்று, நாகேஸ்வரன் தெற்கு வீதியில் செயல்பட்டு வந்த மற்றொரு அழகு நிலையத்திலும் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அங்கும் பாலியல் தொழில் நடைபெறுவது உறுதி செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதிலும்குறிப்பாக, நாகேஸ்வரன் தெற்கு வீதியில் செயல்பட்டு வந்த அந்த அழகு நிலையம் இயங்கி வரும் கட்டிடம், திமுக நிர்வாகி ராஜா ரகுபதிக்கு சொந்தமானது எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து, அவரிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக, அணைக்கரை பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், கும்பகோணத்தைச் சேர்ந்த மகேஷ் மற்றும் அழகு நிலையத்தை நடத்தி வந்த மேலாளரான ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சோட்டால் தாக்கூர் ஆகிய மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அழகு நிலையம் மற்றும் மதுபான பாரில் பாலியல் தொழில் நடைபெற்றதாகக் கூறப்படும் நிலையில், இதுவரை ஒன்பது பெண்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தி.மு.க. மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் ராஜா ரகுபதி தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார். தமிழகத்தில் பாலியல் விவகாரங்கள் விஸ்வரூபம் எடுத்து வரும்நிலையில், இந்த அதிரடி நடவடிக்கையை தி.மு.க. தலைமை எடுத்திருக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal