ஜெம் வீரமணி சிறார் பாலியல் வன்கொடுமை வழக்கு குறித்து விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரட்டுள்ளார். இந்த நிலையில்தான் இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை விரைவில் விசாரணையில் இறங்கபோவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள சிறுமிகளுக்குப் பணம், செல்போன் உட்பட பல்வேறு உதவிகளைச் செய்து பாலியல் வன்கொடுமை செய்ததாக, ஜெம் கிரானைட்ஸ் தொழில் அதிபர் வீரமணி (84) கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவரது உதவியாளர் சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்கனும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதோடு, ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தில் 23 ஆண்டுகள் பணி புரிந்த கணேசன் என்பவரைச் சென்னை பாலியல் தடுப்பு பிரிவு போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கில் முதல் கட்ட விசாரணையின் போது, 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறுமிகளை குறி வைத்து வீரமணி செயல்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. கடந்த கடந்த 2025 அக்டோபர் 6-ம் தேதிதான் வீரமணியின் பாலியல் அத்துமீறல்கள் தொடர்பாக வீடியோவுடன் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதற்கு மறுநாளே வழக்குப் பதிவு செய்து விட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

வழக்குப் பதிவு செய்தாலும், அதன் பிறகு சுமார் 11 மாதங்கள் இந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை. வீடியோ ஆதாரத்துடன் புகார் அளித்தும் வழக்கு கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்த காலக்கட்டத்தில் வழக்கை நீர்த்துப் போகச் செய்யும் வேலையில் போலீஸார் ஈடுபட்டுள்ளதாகத் தற்போது செய்திகள் வெளிவந்துள்ளன.

இந்தப் பரபரப்பான சூழ் நிலையில், சென்னையில் ஜெம் வீரமணிக்கு சொந்தமான வீடு அலுவலங்களில் நேற்று முன்தினமும், சேலத்தில் நேற்றும் தீவிர சோதனை நடத்தப்பட்டது. கடந்த 2025 அக்டோபர் 6-ம் தேதிதான், வீரமணி குறித்து வீடியோ ஆதாரத்துடன் புகார் வந்ததாகப் போலீஸார் கூறினாலும், 2 ஆண்டுகளுக்கு முன்பே கடந்த 2024-ல் போலீஸில் தான் புகார் அளித்ததாக காங்கிரஸ் நிர்வாகி ரஞ்சன் குமார் நேற்றுமுன்தினம் புதுத் தகவலை வெளியிட்டார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

ரஞ்சன் குமார் புகார் தெரிவித்த காலக் கட்டத்தில் சென்னை காவல் ஆணையராக கூடுதல் டிஜிபி-யான அருண் இருந்தார். அவருக்குக் கீழ் தென் சென்னை காவல் கூடுதல் ஆணையராக என்.கண்ணன் இருந்தார். இவர்கள் இருவர் மீதும் புகார்கள் எழுந்ததையடுத்து, இருவரும் காத்திருப்போர் பட்டியலுக்கு உடனடியாக மாற்றப்பட்டுள்ளனர்.

ஜெம் வீரமணி வழக்கில் மிரட்டல் கும்பலுடன் போலீஸார் கைகோத்து செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, கடந்த 2025 அக்டோபரில் சென்னை பாலியல் தடுப்புப் பிரிவில் பணியாற்றிய உதவி ஆணையர் யாஸ்மின், ஆய்வாளர்கள் மகேஷ் குமார், ராஜலட்சுமி ஆகியோர் துறை ரீதியான விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி சென்னை பாலியல் தடுப்புப் பிரிவு போலீஸார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

இந்த விவகாரத்தில் அதிகாரிகள் மற்று அரசியல் வாதிகளுக்கு கோடிக்கணக்கில் பணம் கைமாறியிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில்தான், ஜெம் வீரமணி பாலியல் விவகாரத்தில் சட்டவிரோதப் பண பரிமாற்றம் நடந்திருக்கிறதா? என்ற கோணத்தில் அமலாக்கத்துறை உள்ளே நுழைந்து விசாரணை நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

எனவே, வீரமணி விவகாரத்தில் விரைவில் அரசியல் வாதிகளும், உயர் காவல்துறை அதிகாரிகளும் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal