இந்தியாவின் 73வது குடியரசு தினம் கோலாகலமாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு சென்னையில் உள்ள போர் நினைவு சின்னத்தில் ஆளுநர் ஆர்.என். ரவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, மெரினா கடற்கரைக்கு வந்த கவர்னர் ரவியை முதல்வர் ஸ்டாலின் வரவேற்றார். பின்னர், தேசியக்கொடியை ஏற்றி வைத்து கவர்னர் மரியாதை செலுத்தினார். அப்போது, ஹெலிகாப்டரில் இருந்து மலர்கள் தூவப்பட்டன. முப்படை வீரர்கள், போலீசாரின் அணிவகுப்பு மரியாதையையும் ஏற்று கொண்டார்ஆளுநர்.

இதைத்தொடர்ந்து ஆளுநர் , முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் முப்படைகளின் அணிவகுப்பு, டெல்லி குடியரசு தின அணிவகுப்பிற்காக அனுப்பப்பட்டு மத்திய அரசால் நிராகரிக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்திகளின்  அணிவகுப்பு மரியாதையை ஏற்றனர். இதைத் தொடர்ந்து சென்னை கடற்கரை சாலையில் குடியரசு தின விழா கொண்டாட்டத்தின்போது வீரதீர செயல் புரிந்த காவல்துறையினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதக்கங்களை வழங்கினார்.

சென்னையில் உயிருக்கு போராடியவரை தோளில் தூக்கி சென்ற கீழ்ப்பாக்கம் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரிக்கு வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கம் வழங்கி சிறப்பித்தார். அதேபோல் திருவொற்றியூரில் கட்டட விபத்தின்போது குடியிருப்புவாசிகள் துரிதமாக வெளியேற்றி உயிரிழப்புகள் ஏற்படாமல் தடுத்த தனியரசுக்கு வீரதீர செயலுக்கான பதக்கம் வழங்கப்பட்டது. அத்துடன் வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கம் ராஜீவ் காந்தி, அசோகன், முத்துகிருஷ்ணன், லோகித் ,சொக்கநாதன், சுதா ஆகியோருக்கும்  வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதேபோல் கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்தியதற்காக காவலர்கள் 5 பேருக்கு காந்தியடிகள் காவலர் பதக்கம் வழங்கப்பட்டது.  பதக்கம் பெறும் 5 காவலர்களுக்கும் ரூ. 40,000 காசோலையையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இதையடுத்து அலங்கார ஊர்தி நிகழ்வு நடைபெற்றது. டெல்லியில் அனுமதி மறுக்கப்பட்ட தமிழ்நாட்டின் 4 அலங்கார ஊர்திகள் சென்னையில் அணிவகுப்பு நடத்தின. இதில், வேலுநாச்சியார், குயிலி ,கட்டபொம்மன், பூலிதேவன், அழகுமுத்துக்கோன் ஆகியோரின் சிலைகள் இடம் பெற்றன.

அத்துடன் சுயமரியாதை  சிந்தனையை மக்களுக்கு எடுத்துரைத்த தந்தை பெரியார், செக்கிழுத்த செம்மல்  வஉசி , பாரதியார் , சுப்பிரமணிய சிவா உள்ளிட்ட பலரும் இந்த அலங்கார ஊர்திகள் சிலைகளாக , கம்பீரமாக நின்று நம் வீரத்தையும் பெருமையையும் பறைசாற்றினர்

By admin