பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை, கூட்டணிக் கட்சிகள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் மாநில தலைவரான செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.
ராகுல் காந்திதான் பிரதமர் என்பதை நேர்மையாக, வெளிப்படையாக ஒப்புக் கொள்பவர்கள் உடன் கூட்டணி வைப்பதே நேர்மை என்றும் அவர் தெரிவித்தார்.
விஜய்தான் அடுத்த பிரதமர் என தவெகவினர் கூறி வரும் நிலையில், சென்னையில் செய்தியாளர்களை முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை சந்தித்தார். அப்போது அவர் பேசும்போது, “பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை கூட்டணி கட்சிகள் ஏற்றுக் கொள்ள வேண்டும். பிரதமராக ராகுல் காந்தியை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் எதற்கு கூட்டணி? என்று கேள்வி எழுப்பினார்.
ராகுல் காந்திதான் பிரதமர் என்பதை நேர்மையாக, வெளிப்படையாக ஒப்புக் கொள்பவர்கள் உடன் கூட்டணி வைப்பதே நேர்மை என்றும் அவர் தெரிவித்தார்.
புதிய தலைமைச் செயலகம் குறித்த கேள்விக்கு பதிலளித்த செல்வப்பெருந்தகை, “எந்தப் பகுதியில் திட்டம் வருகிறதோ அந்தப் பகுதி மக்களிடம் ஆலோசனை மேற்கொள்ள வேண்டும். பரந்தூருக்கு சென்று கருத்து கேட்டவர்கள் புதிய தலைமை செயலகத்தில் கருத்து கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
பரந்தூர் விமான நிலையத்தை வேண்டாம் என எப்படிக் கைவிட்டாரோ அதேபோன்று பட்டினப்பாக்கம் மீனவர்களையும் கேட்க வேண்டும். கம்யூனிஸ்டுகள் ஆளும் கட்சிக்கு ஆதரவளித்தாலும் ஆளுமையுடன் கேள்வி கேட்கிறார்கள். அதேபோன்று கூட்டணி கட்சிகளும் மக்கள் பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்க வேண்டும்.” என்று அவர் வலியுறுத்தினார்.
இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் எம்.பி. பிரவீண் சக்கரவர்த்தியிடம் ராகுல் காந்தியை பிரதமராக கூட்டணி கட்சியினர் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனும் கருத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், “அவர் (செல்வப்பெருந்தகை) யார் இப்போது? எதற்கு தேவையில்லாமல் waste-ஆ. கடந்த காலத்தில் என்னவாக வேண்டுமானாலும் இருந்திருக்கலாம். ஆனால் தற்போது அவசியமில்லை. ஆட்சி அமைப்பதற்கு முன் கூட்டணி எப்படி வலுவாக இருந்ததோ. தற்போதும் அப்படியே இருக்கிறது” இவ்வாறு தெரிவித்தார்.
