மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கான கும்பாபிஷேகத்தைத் தற்போதைய தவெக நடத்தி முடித்துள்ளது. சுவாரஸ்யமாக, 1963-ஆம் ஆண்டு முதல் ஒரு குறிப்பிட்ட போக்கு காணப்படுகிறது. அதாவது, எந்தவொரு ஆளும் அரசு இக்கோயிலின் கும்பாபிஷேகத்தை அறிவித்து அதை நடத்தி முடித்ததோ, அந்த அரசு அடுத்த தேர்தலில் மீண்டும் ஆட்சிக்கு வரவில்லை.
இது குறித்து வலைதளத்தில் வந்த பதிவில், ‘‘மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை 1963-இல் காங்கிரஸ் அரசு நடத்தியது. அதன்பிறகு 1967-இல் நடந்த தேர்தலில் அது ஆட்சியைப் பறிகொடுத்தது; அதன்பின் இன்றுவரை ஆட்சிக்கே வரவில்லை. 1974-இல் திமுக கும்பாபிஷேகம் நடத்தியது; அந்த கட்சியும் அதன்பிறகு 1977-இல் நடந்த தேர்தலில் ஆட்சியைப் பறிகொடுத்தது.
அதன்பின் 1995-ஆம் ஆண்டு அதிமுக நடத்தியது; ஆனால் 1996 தேர்தலில் படுதோல்வி அடைந்தது. அதேபோல் 2009-இல் திமுக நடத்தியது; அந்த கட்சியும் 2011-ஆம் ஆண்டு தேர்தலில் மோசமாகத் தோற்றது. அதன் பின் அதிமுக கும்பாபிஷேகம் நடத்தவில்லை. ஆட்சி இழக்கும் என்ற ‘செண்டிமெண்ட்’ காரணமாக இருக்கலாம் என்கிறார்கள். இந்த வருடம் தவெக நடத்துகிறது; பொறுத்திருந்தே இதுபற்றிப் பார்க்க வேண்டும்’’ என்று நெட்டிசன்கள் விமர்சித்துள்ளனர்.
இது மூட நம்பிக்கை என்பதை த.வெ.க. கண்டிப்பாக உணர்த்தும் என்கிறார்கள் அக்கட்சியினர். இதே போல், தஞ்சைப் பெரிய கோயிலைச் சுற்றிலும் இப்படி ஒரு வதந்தி ஓடிக்கொண்டிருக்கிறது. தஞ்சைப் பெரிய கோயிலுக்குச் செல்லும் அரசியல்வாதி பதவியை இழப்பார் என்று பரவிய கட்டுக்கதை காரணமாக, அரசியல்வாதிகள் அந்தக் கோயில் பக்கமே போவதில்லை. ஏனெனில், தஞ்சைப் பெரிய கோயிலுக்குள் கேரள அந்தகன் கோபுரம் (கேரளாந்தகன் திருவாசல்) அல்லது முதன்மை வாசல் வழியே நுழையும் அரசியல்வாதிகள், முதலமைச்சர்கள் அல்லது முக்கியத் தலைவர்கள் தங்களது பதவியை இழப்பார்கள் அல்லது ஆட்சியை இழப்பார்கள் என்று அரசியல்வாதிகளே நம்புகிறார்கள்.
கோயிலைக் கட்டிய மாமன்னன் முதலாம் ராஜராஜ சோழன், கோயில் கட்டி முடிக்கப்பட்ட சில காலங்களிலேயே மறைந்தார் என்றும், அதற்குப் பிறகு சோழ மன்னர்களின் தலைநகரம் கங்கை கொண்ட சோழபுரத்திற்கு மாற்றப்பட்டது என்றும் வதந்தியைக் கிளப்பிவிட்டார்கள். எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் பெரிய கோயிலின் ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழா திட்டமிடப்பட்டது. ஆனால், “கோயிலுக்குள் சென்றால் பதவி போய்விடும்” என்ற பயத்தால் எம்.ஜி.ஆர் முதன்மை நுழைவாயில் வழியாகச் செல்லாமல், பக்கவாட்டு வாசல் வழியாக உள்ளே சென்றார் என்ற பேச்சு பரவியது. அதேபோல் 2010-ஆம் ஆண்டு தஞ்சைப் பெரிய கோயிலின் 1000-வது ஆண்டு பெருவிழாவை அப்போதைய முதல்வர் கலைஞர் கருணாநிதி மிகப்பிரமாண்டமாகக் கொண்டாடினார். அப்போது அவர் ‘கேரள அந்தகன் கோபுரம்’ (கேரளாந்தகன் திருவாசல்) வழியாக நுழையாமல், பக்கவாட்டில் அமைக்கப்பட்ட சிறப்பு நுழைவாயில் வழியாகவே அழைத்துச் செல்லப்பட்டதும் விமர்சனமானது.
