சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவிகளை குறுகிய காலத்தில் ராஜினாமா செய்துவிட்டு, மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுவது குறித்து தேர்தல் ஆணையம் ஆய்வு செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் நடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு அதிமுக எம்எல்ஏக்கள், தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து விட்டு ஆளுங்கட்சியான தவெகவில் இணைந்தனர்.

இதில் தேர்தல் வழக்கு நிலுவையில் உள்ள, அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தடை விதித்து உள்ளது. தேர்தல் வழக்கு நிலுவையில் இல்லாததால், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை அறிவித்துள்ளது.

இந்நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியான குறுகிய காலத்தில், மக்கள் தீர்ப்பை புறக்கணித்து அரசியல் காரணங்களுக்காக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ததால், இடைத்தேர்தலில் அவர்கள் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்யும்போது, தேர்தல் செலவை டெபாசிட் செய்யும் வகையில் உரிய நடைமுறையை வகுக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த வழக்கறிஞர் சுதன் என்பவர் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், சொந்த அரசியல் காரணங்களுக்காக எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்ததால், பொதுமக்களின் வரிப்பணத்தில் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டி உள்ளது. இந்த செலவுகளுக்கு அவர்களை பொறுப்பாக்கும் வகையில் உரிய நடைமுறைகளை வகுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், தேர்தல் முடிவுகள் வெளியான குறுகிய காலத்தில் அரசியல் காரணங்களுக்காக மக்கள் தீர்ப்பை புறக்கணித்து பதவி விலகுபவர்களை குறிப்பிட்ட காலத்துக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்கும் வகையில் சட்டம் கொண்டு வருவது குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல, திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த ஆகும் செலவுகளை அறிக்கையாக தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், கிருஷ்ணசாமி கோவிந்தராஜன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது நீதிபதிகள், மக்கள் நம்பிக்கையின் அடிப்படையில் தங்கள் சட்டமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கிறார்கள். ஆனால் இது போன்று குறுகிய காலத்தில் மீண்டும் தேர்தல் நடத்துவது கேலி கூத்தாக்குவது போலாகும் என தெரிவித்தனர்.

இது வாக்காளர்களை அவமானப்படுத்தும் செயல் என்றும் குறுகிய காலத்தில் ராஜினாமா செய்துவிட்டு அதே தொகுதியில் மீண்டும் போட்டியிடுவது குறித்து தேர்தல் ஆணையம் ஆய்வு செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

மேலும், இதை தடுக்க இதுவரை எந்த வழிமுறைகளும் இல்லை என்றும் தேர்தலுக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என தெரிவித்த நீதிபதிகள், ஏற்கனவே இதுபோல வழக்குகள் தலைமை நீதிபதி அமர்வு முன்பு நிலுவையில் இருப்பதால் அந்த வழக்குகளோடு இந்த வழக்கையும் சேர்த்து விசாரிக்க பரிந்துரைத்து உத்தரவிட்டனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal