முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் தி.மு.க-விலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் தி.மு.க-விலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு ஈரோடு மத்திய மாவட்ட பொறுப்பாளர் பதவியிலிருந்து தோப்பு வெங்கடாச்சலம் நீக்கப்பட்ட நிலையில், இந்த முடிவை எடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், “தி.மு.க-வின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகுவதாக தலைமைக்கு கடிதம் அனுப்பி உள்ளேன். மத்திய மாவட்ட பொறுப்பாளர் பதவி வழங்கியதற்கு நன்றி.
தி.மு.க-வில் ஏற்பட்ட கசப்பான அனுபவம் எனக்கு கொடுத்த மனக்கசப்பால், இனியும் தி.மு.க-வில் தொடர முடியாதததால் விலகுகிறேன். இப்போதைக்கு எந்த இயக்கத்திற்கும் செல்லும் எண்ணம் எனக்கு இல்லை. தற்போதைக்கு வேறு இயக்கத்திற்கு செல்ல முயற்சிக்கவில்லை. இறந்தகாலத்தை குறைகூறாமல் நிகழ்காலத்தை தொடர விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க-வில் இருந்து விலகி தி.மு.க-வில் இணைந்த முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம், 2026 சட்டமன்ற தேர்தலில் பெருந்துறை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இந்தத் தோல்விக்கு தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் முத்துசாமிதான் காரணம் என தோப்புவின் ஆதரவாளர்கள் குமுறி வந்தனர். அதன்பின்னர் அவர், கட்சி செயல்பாடுகளில் இருந்து ஒதுங்கி இருந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து ஈரோடு மத்திய மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்ட தோப்பு வெங்கடாச்சலம் இப்போதைக்கு மாற்றுக்கட்சிக்கு போகும் எண்ணம் இல்லை என்று தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
