2026 சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தோல்வியடைந்தார். இதன் காரணமாக ஸ்டாலின் குடும்பத்தினர் சேகர் பாபு மீது கோபத்தில் இருப்பதாக செய்திகள் வெளியானது. இந்த செய்தி உண்மை என உதயநிதி ஸ்டாலின் பேசியதில் இருந்து அறிந்து கொள்ள முடிகிறது.

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு நாளையொட்டி, நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் சேகர் பாபு, தயாநிதி மாறன் உள்ளிட்ட திமுகவினர் பங்கேற்றனர்.

நிகழ்வில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “இன்று ஆளும்கட்சியாக வந்தவர்கள் எப்படி இந்த நிலைக்கு வந்தார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்க வேண்டும். தேர்தலில் நாம் எதிர்பார்த்தது பெரிய வெற்றி. திராவிட மாடல் 2.ளி நிச்சயம் அமையும் என எதிர்பார்த்தோம். நம்பிக்கையுடன் இருந்தோம். ஆனால், தேர்தலில் நமக்கு யார் எதிரி என்பது தெரியாமல் சண்டை போட்டுவிட்டோம்.

இன்றைக்கு யார் எதிரி என்பது நமக்கு தெரிந்துவிட்டது. மீண்டும் அந்த தவறை நாம் செய்ய மாட்டோம். செய்ய மாட்டீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. கிழக்கு மாவட்டத்தில் மாதம் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறேன். சிறிய இடைவேளை விழுந்துவிட்டது. 4 மாதங்களுக்குப் பிறகு நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளேன்.

இதனால் நான் முன்னாள் அமைச்சர் சேகர் பாபு மீது கோபமாக இருக்கிறேன், அதனால் நிகழ்ச்சிக்கு வரவில்லை என்று அவர் நினைத்துக் கொள்ளலாம். ஆனால், அது கோபம் இல்லை. வருத்தம். வருத்தம் மட்டுமல்ல, அவர் மீதும், இந்த மாவட்டம் மீதும் எனக்கு இருக்கும் உரிமை.

தேர்தல் தோல்விக்கு சினிமா மாயை, கவர்ச்சி, இளம் தலைமுறையினரின் சமூக வலைதள கவர்ச்சி, திராவிட மாடல் திட்டங்கள் இளம் தலைமுறையினரை சேரவில்லை என பல காரணங்களை கூறலாம். ஆனால், கொளத்தூர் தொகுதியின் தோல்வியை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியுமா? அந்த தோல்வியை தயவு செய்து யாரும் மறந்துவிடக் கூடாது. அது நமக்கு மிகப்பெரிய பாடம். அடுத்த தேர்தலில் இந்த தோல்விகளை வெற்றியாக மாற்றிகாட்ட வேண்டும்” என்றார்.

இந்நிகழ்ச்சியின் மூலம் சேகர் பாபு மீதான கோபத்தையும், வருத்தத்தையும் உதயநிதி மனம் திறந்து பேசியிருக்கிறார். இனி எந்தக் கோபமும், வருத்தமும் இருக்காது என்கிறார்கள் உடன் பிறப்புக்கள்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal