கடந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் முதல் முறை வாக்களர்கள் மற்றும் இளைஞர்கள், இளம்பெண்கள் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி வரலாற்று புரட்சியை ஏற்படுத்தினார்கள். இந்த நிலையில்தான் தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளில் கட்டமைப்பை தலைமை மாற்றி வருகிறது.
திமுகவில் மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், கிளைச் செயலாளர்கள் என முக்கியமான பதவிகளுக்கு வயது நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் தலைவர், பொது செயலாளர் பதவிக்கு மட்டும் வயது நிர்ணயம் செய்யப்படவில்லை. இதை அடுத்து சமூக வலைதளங்களில் ‘சில’ திமுகவினர் மட்டும் தங்கள் கொந்தளிப்பை பதிவு செய்து வருகின்றனர். அதேபோல இளைஞர் அணி தலைவர் பதவிக்கும் வயது நிர்ணயம் செய்யப்படாத நிலையில் சில சீனியர்கள் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் பரிதவித்து வருகிறார்களாம்.
இது பற்றி அறிவாலயம் வட்டாரத்தில் பேசினோம். ‘‘2026 தமிழக சட்டசபை தேர்தலில் திமுக தோல்வியை சந்தித்த நிலையில் அதனை மறு சீரமைப்பு செய்யும் பணியில் திமுக தலைமை தீவிரமாக இறங்கி உள்ளது. குறிப்பாக தேர்தல் தோல்விக்கு மா.செ.க்கள் தான் காரணம் என்ற புகார் தலைமைக்கு பறந்துள்ளது. கடந்த தேர்தலில் பெரும்பாலான மாவட்டங்களில் தாங்களும், தங்கள் வாரிசுகளும் போட்டியிட்ட தொகுதிகளை தவிர பிற தொகுதிகளை மாவட்ட செயலாளர்கள் கண்டு கொள்ளவில்லை என்றும், வேட்பாளர்கள் தேர்வில் கவனம் செலுத்தவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.
அது மட்டும் இல்லாமல் தலைமை கொடுத்த பணத்தை முழுமையாக செலவு செய்யவில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது. திருச்சி புறநகர் பகுதிகளான துறையூர், உப்பிலியபுரம் ஒன்றியங்களில் தி.மு.க.வுக்கு ஓட்டுப் போடுபவர்களுக்கு மட்டும் கவனிப்பை செய்துவிட்டு, மீதியை ஒன்றியச் செயலாளர்களே சுருட்டிக் கொண்டார்கள். இதே போல் தமிழகம் முழுவதிலும் பல மாவட்டங்களில் நடந்திருக்கிறது.
இதற்கிடையே சில மாவட்ட செயலாளர்கள் குறுநில மன்னர்கள் போல செயல்பட்டு வருவதாகவும் புகார்கள் எழுந்தது. இதை அடுத்து தேர்தல் தோல்விக்கு பிறகு கட்சிப் பணிகளை விரைவுப்படுத்தவும், கட்சியின் அமைப்பு ரீதியாக மாவட்டங்களை பிரிக்கவும், திமுக தலைவர் ஸ்டாலின் திட்டமிட்டார்.
இதற்காக கட்சி சார்பில் மறு சீரமைப்பு குழு உருவாக்கப்பட்டது. அந்த குழுவின் அறிக்கையின் அடிப்படையில் மாவட்டங்களை பிரிக்கும் முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது. இதற்கான தீர்மானமும்ம் திமுகவின் செயற்குழுவிலும் நிறைவேற்றப்பட்டது. இதனால் 77 என்ற திமுக மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கை 117 ஆக உயர்கிறது. இரண்டு அல்லது மூன்று சட்ட சபை தொகுதிகளை உள்ளடக்கி ஒரு திமுக மாவட்டம் என பிரிக்கப்பட இருக்கிறது.
புதிதாக மாவட்டங்கள் பிரிக்கப்படுவதால் மாவட்ட செயலாளர்கள் பதவியில் இளைஞர்கள், பெண்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கும் நிலையில், புதிய மாவட்ட செயலாளருக்கு பதவிக்கு போட்டி இருந்தால் தேர்தல் நடத்தவும் திமுக ஆலோசித்து வருகிறது. அதே நேரத்தில் தேர்தல் நடத்தினால் உருவாகும் என்பதால் அவ்வாறு செய்ய வேண்டாம் எனவும், தங்கள் ஆதரவாளர்களை மாவட்ட செயலாளராக நியமிக்க வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் கூறினாராம்.
இதையடுத்து தேர்தல் நடத்தலாமா? வேண்டாமா? எனவும் தனியாக ஒரு ஆலோசனை நடைபெற்று வருகிறது. இதற்கிடையே கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக செயற்குழுவில் மொத்தம் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில் மாவட்ட செயலாளருக்கு உள்ளிட்ட முக்கிய பதவிகளுக்கு வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டது.
கிளை செயலாளர்களுக்கு 45, வட்டச் செயலாளர்களுக்கு 50, ஒன்றிய செயலாளர்களுக்கு 60, மாவட்ட செயலாளர்களுக்கு 70 என வயது நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. மாநகர செயலாளர் பதவி நீக்கப்பட்டுள்ளதோடு, ஒருவர் ஒரு பொறுப்பில் அதிகபட்சம் இரண்டு முறை மட்டுமே இருக்க முடியும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் சிறிது நேரத்தில் மாவட்ட செயலாளருக்கு மட்டும் அதிகபட்சம் மூன்று முறை பதவியில் இருக்கலாம் என தீர்மானம் திருத்தப்பட்டது.
திமுகவின் மாவட்ட செயலாளர்களின் வயது உச்சவரம்பு 70 ஆக நிர்ணயிக்கப்பட்டிருக்கும் நிலையில் எவ வேலு, செஞ்சி மஸ்தான், ஆர் காந்தி, சுந்தர், எஸ் ஆர் சிவலிங்கம், முத்துசாமி, சாக்கோட்டை அன்பழகன், ரகுபதி, ராமகிருஷ்ணன், ஆவுடையப்பன், கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், அனிதா கிருஷ்ணன் ஆகியோர் தங்கள் பதவியை இழக்க இருக்கின்றனர்.
இதை அடுத்து அவர்களுக்கு அமைப்பு செயலாளர் உள்ளிட்ட பதவிகள் வழங்கப்படலாம் என சொல்லப்படும் நிலையில் அவர்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. திமுக கிளை, வட்டம், ஒன்றியம், மாவட்ட செயலாளர்களுக்கு வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கும் நிலையில் கட்சியின் அதிகாரம் மிகுந்த தலைவர் பதவிக்கு உச்சவரம்பு நிர்ணயிக்கப்படவில்லை. அது மட்டும் அல்லாமல் இளைஞர் அணி, பொதுச் செயலாளர் பதவிகளுக்கும் வயது வரம்பு நிர்ணயம் செய்யப்படவில்லை. இதனை சில திமுகவினர் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.
குறிப்பாக பதவியை இழக்க இருக்கும் மாவட்ட செயலாளர்கள் தங்கள் ஆதரவாளர்கள் மூலம் சமூக வலைதளங்களில் சில பதிவுகளை வைரலாக்கப்பட்டு வருகிறது’’ என்கின்றனர்.
