‘‘தேர்தல் வழக்குகள் முடியும் வரை திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கும் திட்டம் இல்லை” என தேர்தல் ஆணையம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், இரு தொகுதிகளில் போட்டியிட்ட முதல்வர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்தார். அதேபோல, கரூர் தொகுதி எம்.எல்.ஏ. – எம்.ஆர்.விஜயபாஸ்கர், விராலிமலை தொகுதி எம்.எல்.ஏ. – சி.விஜயபாஸ்கர், பெருந்துறை எம்.எல்.ஏ. ஜெயக்குமார், அம்பாசமுத்திரம் எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ஆகியோர் ராஜினாமா செய்துள்ளனர்.

இவர்களின் வெற்றியை எதிர்த்த தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ள போது, இந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதிக்கக் கோரி திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையைச் சேர்ந்த வெங்கடாஜலபதி, சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஐந்து தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதித்து, இந்திய தேர்தல் ஆணையம், மத்திய அரசு, சட்டப்பேரவை செயலாளர், முதல்வர் விஜய், எம்.எல்.ஏ.-க்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர், ஜெயக்குமார், இசக்கி சுப்பையா உள்ளிட்டோர் மூன்று வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.

இந்த தடையை நீக்கக் கோரி கரூர் முன்னாள் எம்.எல்.ஏ. – எம்.ஆர்.விஜயபாஸ்கர், விராலிமலை முன்னாள் எம்.எல்.ஏ. சி.விஜயபாஸ்கர் தரப்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் ஆணையம் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், ‘‘உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, தேர்தல் வழக்குகள் முடியும் வரை திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கும் திட்டம் இல்லை” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த பதில் தவறு என முதல்வர் விஜய் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

தமிழக அரசுத்தரப்பில், ஐந்து தொகுதிகள் மக்கள் பிரதிநிதிகள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதால், இந்த வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal