தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியை இழந்து த.வெ.க. ஆட்சியைப் பிடித்து ஒரு மாதம் முடிவடைந்த நிலையில் ‘மாஜி’ அமைச்சர்கள் மீது ஜெயலலிதா பாணியில் நடவடிக்கை எடுக்க ஆயத்தமாகி வருகிறார் முதல்வர் விஜய். அந்த வகையில் செந்தில் பாலாஜி வீட்டிற்கு இன்று காலை போலீசார் சென்று விசாரணை நடத்திய சம்பவம்தான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு கரூர் மற்றும் கோவையில் வீடுகள் உள்ளன. இதேபோல அவர் சென்னையில் தங்குவதற்காக எம்.ஆர்.சி. நகரில் வாடகைக்கு ஒரு வீடு எடுத்துள்ளார். கடந்த ஒரு மாதமாக அவர் சென்னை வரும்போது அங்கு தான் தங்குவார். சட்டமன்றம் வரும்போதும், அரசியல் தொடர்பான ஆலோசனை செய்வதற்காகவும் அந்த வீட்டை பயன்படுத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலை செந்தில் பாலாஜியின் வீட்டுக்கு திடீரென காவல்துறையினர் சென்றுள்ளனர். அந்த நேரத்தில் செந்தில் பாலாஜி வீட்டில் இல்லை. அவரின் கார் வீட்டில் இருந்த நிலையில் பணியில் இருந்த ஊழியர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அவர்களின் செல்போன்களை வாங்கி யாரிடமெல்லாம் பேசினார்கள் என்று சோதனை செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

ஆனால் எந்த காவல்துறையினர், எதற்காக விசாரணை நடத்தப்பட்டது என்று தகவல் தெரியவில்லை. செந்தில் பாலாஜி சம்பந்தமாக பல்வேறு வழக்குகள் உள்ளன. கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தியுள்ளனர். டிரான்ஸ்பார்மர் வழக்கு குறித்து சிபிஐ, போக்குவரத்து பணிநியமன குறித்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இதனால் எந்த வழக்கு குறித்து எந்த அமைப்பினர் விசாரணை நடத்தினார்கள் என்று தெரியாமல் குழப்பம் ஏற்பட்டது.

நேற்று இரவு வரை செந்தில் பாலாஜி சென்னையில் இருந்ததாக கூறப்படுகிறது. செந்தில் பாலாஜியின் வீட்டிற்குள் சில அதிகாரிகளும், வெளியில் ஏராளமான காவல்துறையினரும் இருந்தனர். இந்நிலையில் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்கை காவல்துறையினர் தேடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அசோக்கை கரூரில் தேடியும் கிடைக்காததால், அந்த காவல்துறையினர் சென்னை வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தவிர, அறநிலையத்துறை, பள்ளிக் கல்வித்துறை என அடுத்தடுத்த நடவடிக்கைகளுக்கு ஆயத்தமாகி வருகிறதாம் த.வெ.க. அரசு!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal