பெரம்பூர் தொகுதியில் த.வெ.க. தலைவர் விஜய்யை வீழ்த்துவதற்கு தி.மு.க. இளைஞரணியின் மூலம் உதயநிதி வியூகம் வகுத்து, செயல்படுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

இது பற்றி தி.மு.க. இளைஞரணியைச் சேர்ந்த சில நிர்வாகிகளிடம் பேசினோம். ‘‘சார், வேளச்சேரி தொகுதியில் விஜய் போட்டியிட்டிருந்தால், தி.மு.க. மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ஜோயலை களமிறக்க திட்டமிட்டிருந்ததர் உதயநிதி. ஆனால், விஜய் பெரம்பூர் தொகுதியில் களமிறங்கியதால் சிட்டிங் தி.மு.க. எம்.எல்.ஏ., ஆர்.டி.சேகரையே தி.மு.க. தலைமை களமிறக்கியது.

சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் தி.மு.க.வையே குறி வைத்து தாக்கிப் பேசிவந்தார் விஜய். இந்த பேச்சுதான் உதயநிதி ஸ்டாலினை உஷ்ணப்படுத்தியது. இதனால், பெரம்பூர் தொகுதியில் விஜய் வெற்றி பெறக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார் உதயநிதி. இதனால்தான் இளைஞரணியில் மூலம் புதிய வியூகத்தை வகுத்து செயல்படுத்தியிருக்கிறார்.
அதாவது, பெரம்பூர் தொகுதிக்கு தி.மு.க. தேர்தல் பொறுப்பாளராக கிரிராஜன் எம்.பி. அவர்களை முதலில் நியமித்தார்கள். அதன் பிறகு அவரை மாற்றி விட்டு, இளைஞரணி துணைச் செயலாளர் ஜோயலை நியமித்திருக்கிறார்கள். தவிர, ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பது போல் தி.மு.க. இளைஞரணியில் திறமையான இளைஞர்கள் 1200 பேரை தேர்ந்தெடுத்து பெரம்பூர் தேர்தல் களத்தில் களம் இறக்கியிருக்கிறார்கள்.
இந்த இளைஞர்கள் ஆர்.டி.சேகருக்கு ஆதரவாக வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்து வருகிறார்கள். உதயநிதியின் நம்பிக்கை நட்சத்திரமான ஜோயலும் முழு வீச்சில் களத்தில் இறங்கி வேலை பார்த்து வருகிறார். தவிர, இளைஞரணி நிர்வாகிகளை வைத்து தீவிரமாக தேர்தல் பணியாற்றி வருகிறார் எஸ்.ஜோயல். இதனால், தொகுதியின் நிலைமை தி.மு.க.விற்கு சாதகமாக மாறி வருகிறது’’ என்றனர்.
விஜய்க்கு எதிராக இப்படியொரு வியூகமா..? பொறுத்திருந்து பார்ப்போம்..!
