‘ஒவ்வொரு வீட்டிலும் த.வெ.க.வுக்கு வாக்கு இருக்கிறதா?’ என கேள்வி எழுப்பிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, ‘நடிகர் விஜய் வாயிலேயே வடை சுட்டுக்கொண்டிருக்கிறார்’ என கிண்டலடித்திருக்கிறார்.

மாமல்லபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகம் (தவெக) செயல்வீரர்கள் கூட்டத்தில், கட்சித் தலைவர் நடிகர் விஜய் முதன்முறையாக அதிமுகவை நேரடியாகக் கடுமையாக விமர்சித்தார். முன்னாள் ஆட்சியாளர்களை “ஊழல் சக்தி” என்று அழைத்த அவர், பாஜகவுக்கு அடிமையாக இருந்ததாகக் குற்றம்சாட்டினார். திமுக மற்றும் அதிமுக இரு கட்சிகளும் அண்ணாவின் கொள்கைகளை மறந்து மக்களை ஏமாற்றி வருவதாகவும், இனி தமிழகத்தை ஆளக்கூடாது என்றும் உரத்த குரலில் முழங்கினார். இந்தப் பேச்சு தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு அதிமுக தரப்பில் உடனடியாக கடும் எதிர்வினை வெளியானது. கட்சியின் ஐடி விங் “நடிகர் விஜய் தான் ஆகப்பெரும் ஊழல்வாதி” என்று பதிலடி கொடுத்த அறிக்கை வெளியிட்டது. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார். “அரசியலுக்கு புதுமுகமாக வந்த விஜய்யை வரவேற்றோம், ஆனால் எங்கள் காதையே கடிக்கிறார்” என்று கூறிய அவர், தவெக ரசிகர்களின் அழிச்சாட்டியம் காரணமாக அரசியலை விட்டே விலகலாம் போல இருப்பதாகவும், விஜய் கட்சி நீண்ட நாட்கள் நிலைத்திருக்காது என்றும் தெரிவித்தார்.

செல்லூர் ராஜு தனது விமர்சனத்தில் விஜய்யின் பேச்சுகளை “வாயில் வடை சுடுவது” போன்றவை என்று கிண்டலடித்தார். “ஒவ்வொரு வீட்டிலும் தவெகவுக்கு வாக்கு இருப்பதாக விஜய் கூறுகிறார்ஞ் எப்படி கணக்கெடுத்தார்? எத்தனை வீடுகளுக்குச் சென்று சென்சஸ் எடுத்தார்?” என்று கேள்வி எழுப்பினார். நடிகர் என்ற மாஸ் மட்டுமே இருப்பதால் கூட்டம் கூடுகிறது என்றும், ஆதவ் அர்ஜுனாவை வைத்துக்கொண்டு ஊழல் பற்றி பேசுவது வேடிக்கை என்றும் சாடினார். “சும்மா பில்டப் தான்ஞ் ஒரு கதாநாயகன் பில்டப் தான் கொடுப்பார்” என்று கூறி, விஜய்யின் அரசியல் உத்தியை சினிமா ஸ்டைலில் இருப்பதாக விமர்சித்தார்.

மேலும், விஜய் அறையிலேயே அமர்ந்து அரசியல் செய்வதாகவும், களத்தில் இறங்கி மக்களிடம் பணியாற்ற வேண்டும் என்றும் செல்லூர் ராஜு வலியுறுத்தினார். “புகழை வைத்து ஓட்டு வாங்கிவிடலாம் என்று நினைக்கிறார்கள்ஞ் ஆனால் அரசியல் இயக்கம் தொடங்கினால் களப்பணி அவசியம்” என்று கூறினார். கரூர் உள்ளிட்ட சம்பவங்களில் 41 பேர் உயிரிழந்தது போன்றவற்றை சுட்டிக்காட்டி, ரசிகர்களை கட்டுப்படுத்த முடிகிறதா? உலகில் எங்கும் இல்லாத புதிய நடைமுறையை விஜய் கொண்டு வந்துள்ளார் என்றும் குற்றம்சாட்டினார்.

இந்த விமர்சனங்கள் தவெகவுக்கு எதிரான அதிமுகவின் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளன. விஜய் இதுவரை திமுகவை மட்டுமே முதன்மையாக விமர்சித்து வந்த நிலையில், இப்போது அதிமுகவையும் நேரடியாக தாக்கியது கட்சியின் புதிய உத்தியாக பார்க்கப்படுகிறது. 2026 சட்டமன்றத் தேர்தலில் தவெக எப்படி இந்த விமர்சனங்களை சமாளிக்கும், அதிமுக எப்படி பதிலடி கொடுக்கும் என்பது அரசியல் வட்டாரத்தில் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal