தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணியில் மீண்டும் உரசல் ஆரம்பித்திருப்பதுதான், மு.க.ஸ்டாலினுக்கும், காங். தலைவர் செல்வப் பெருந்தகைக்கும் பெரும் தலைவலியை ஏற்படுத்தியிருக்கிறது.
‘ஆட்சி, அதிகாரத்தில் பங்கு வேண்டும்’ என காங்கிரஸ் தலைவர்கள் கோரிக்கை வைத்து வந்தனர். இது தி.மு.க. தலைமையை கடும் எரிச்சலுக்கு உள்ளாக்கியது. இந்த நிலையில்தான், வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிக தொகுதிகள் வேண்டும் என காங்கிரஸ் நிர்வாகிகள் வலியுறுத்தி வந்தனர். ஆனால், தி.மு.க. தலைமையோ, கடந்த முறை கொடுத்த சீட்டில் ஒரு சீட் கூட எக்ஸ்ட்ரா கிடையாது என ஸ்ட்ரிக்டாக சொல்லிவிட்டது.

இந்த நிலையில்தான், மதுரை மாவட்டம் சுப்பிரமணியபுரம் பகுதியில் நேற்று இரவு திமுக மாணவர் அணி சார்பில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில், திமுக மாநகர மாவட்டச் செயலாளர் கோ. தளபதி, காங்கிரஸ் கட்சியை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
கூட்டத்தில் பேசிய அவர், ‘‘காங்கிரஸில் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் பெயரைச் சொல்ல எனக்கு என்ன பயமா? மாணிக்கம் தாகூர், ஜோதி மணி போன்றோரைத்தான் சொல்கிறேன். அவர்கள் எம்பியாகிவிட்டார்கள். இந்தத் தேர்தலில் யார் எம்எல்ஏ ஆனால் என்ன, ஆகாவிட்டால் என்ன என நினைக்கிறார்கள். அவர்கள் இன்று அதில் பங்கு வேண்டும், இதில் பங்கு வேண்டும் என்று கேட்கிறார்கள். இவையெல்லாம் தலைமை புரிந்து அவர்களுக்கு அடுத்த முறை சீட்டே கொடுக்கக் கூடாது.
திமுக உணர்வுபூர்வமாக இந்தியா கூட்டணியில் இருக்கிறது. இக்கூட்டணியைக் காப்பாற்றும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. நாம் இல்லாவிட்டால் இண்டியா கூட்டணியே கிடையாது. டெல்லியில் இக்கூட்டணி பேசப்படுகிறது என்றால், அதற்கு முதல்வர் ஸ்டாலின், மமதா பானர்ஜி, அகிலேஷ் யாதவ் ஆகிய மூன்று பேர்தான் காரணம். மேலும் பல விஷயங்களைச் சொன்னால் அது தவறாகப் போய்விடும் என்பதால் வெளிப்படையாகப் பேச விரும்பவில்லை. ஒரு தொகுதிக்கு 3000 அல்லது 4000 வாக்குகளை மட்டுமே வைத்திருக்கும், வார்டுகளில் பூத் கமிட்டி அமைக்க ஆள் இல்லாத கட்சி காங்கிரஸ். அவர்கள் இந்த அளவுக்குப் பேசுகிறார்கள் என்பதுதான் நம் மனதிற்கு ரொம்ப வேதனையாக இருக்கிறது’’ என தெரிவித்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக மாணிக்கம் தாகூர் தனது சமூகவலைதள பக்கத்தில், ‘‘இந்த முறை மதுரை வடக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் நிற்க வேண்டும் என்று அன்புதலைவர் கார்கேவிடம் கோரிக்கை வைப்பேன். தன்மான காக்க சிலருக்கு பாடம் புகட்ட வேண்டும். அதிகார திமிருடன் இருந்தால் தோழமை கட்சிகள் அமைதியாக இருக்கும் காலம் முடிந்துவிட்டது’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
தி.மு.க. & காங்கிரஸ் கூட்டணி உடையாதா? என ‘கொக்கு’ போல த.வெ.க. காத்திருக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது.
