தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்திருக்கும் நிலையில், ‘ஒரு வாரம் பொறுத்திருங்கள் நிறைய செய்தி வரும்’ என பா.ஜ.க.மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ட்விஸ்ட் வைத்திருக்கிறார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடந்தது. அதில் அ.தி.மு.க.விலிருந்து பிரிந்திருந்த டி.டி.வி.தினகரன் என்.டி.ஏ. கூட்டணியில் இணைந்தது ஒரு பலமாக பார்க்கப்படுகிறது.

தவிர, டாக்டர் ராமதாஸின் பா.ம.க, தே.மு.தி.க. ஆகிய கட்சிகள் முடிவெடுக்காமல் உள்ளன. தி.மு.க., அ.தி.மு.க. மற்றும் மறைமுகமாக பா.ஜ.க.வை விமர்சித்திருந்தார் விஜய். இந்த நிலையில்தான் ‘ஒருவாரம் பொறுத்திருங்கள்’ என நயினார் கூறியிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது.

பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் திருநெல்வேலியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘‘அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துகள். அனைவருக்கும் விடிகின்ற அரசாக வர வேண்டும். அன்புமணி, டிடிவி தினகரன், ஜான் பாண்டியன், ஜி கே வாசன், ஏ.சி சண்முகம், பாரிவேந்தர், செல்லமுத்து, பூவை ஜெகன் மூர்த்தி மற்றும் பல அமைப்புகளுடன் பிரம்மாண்ட கூட்டணி அமைத்துள்ளோம். மதுராந்தகத்தில் சாதாரண கூட்டமாக நினைத்து மாநாடு நடத்தி விட்டோம்.

தமிழ்நாட்டில் எங்கள் கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும். முன்பு என்னிடம் செய்தியாளர் சந்திப்பில் கூட்டணியில் இருந்து பிரிந்து பிரிந்து போகிறார்களே. நீங்கள் எப்படி வலுவான கூட்டணி என்று ஏளமான கேட்டீர்கள். அதற்கான பதில் கடந்த 23 ஆம் தேதி கிடைத்துவிட்டது.

தேமுதிக மற்றும் ராமதாஸ் பாமக தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவார்களா என்கிற கேள்விக்கு இன்னும் ஒரு வாரத்தில் பதில் கிடைக்கும். பிரேமலதா சொன்னதைப் பற்றி நான் எதுவும் கருத்து சொல்ல முடியாது. ஒரு வாரத்தில் உங்களுக்கு நிறைய செய்திகள் கிடைக்கும். எல்லாவற்றையும் இப்போதே சொல்ல முடியாது. அடுத்தடுத்து செய்திகள் வரும்.

கடந்த 5 வருடங்களில் முதலமைச்சர் முழுக்க முழுக்க பொய் சொல்லிக் கொண்டிருக்கிறார். நீட் தேர்வை கொண்டு வந்ததே அவர்கள் தான். சொத்து வரி உயர்வு, பால் விலை எல்லாமே உயர்ந்துவிட்டது. தேர்தல் வருவதால் பயத்தில் பொங்கல பரிசாக ரூ. 3,000 வழங்கியுள்ளனர். மற்றபடி மகளிருக்கு மாதம் ரூ.1,000 தருவதை தவிர வேறு எதையும் திமுக செய்வதில்லை.

தவெக தலைவர் விஜய்க்கு அவர் கட்சியில் என்ன நடக்கிறது என்ற விபரமே தெரியவில்லை. தவெகவில் எத்தனை மாவட்ட செயலாளர்கள் இருக்கிறார்கள் என்பதாவது அவருக்கு தெரியுமா? விஜய்க்கு எந்த அழுத்தம் கொடுக்க வேண்டிய அவசியமும் பாஜகவுக்கு இல்லை. யாரையும் அடிமையாக வைத்திருக்க வேண்டியதில்லை. எல்லோரும் சுதந்திரமாக செயல்படலாம். நாங்கள் தீய சக்தியோ, ஊழல் கட்சியோ இல்லை. அதனால் எங்களை விமர்சிக்கவில்லை’’ என்றார்.

ஒரு வாரத்தில் என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal