சென்னையில் வங்கி மேலாளரை மு.க.அழகிரியின் மகள் கயல்விழி தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக கயல் விழியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
லிப்ட் ஒர்க் ஆகாதது தொடர்பாக கட்டட உரிமையாளரான தன்னிடமே எகத்தாளமாக பேசுவியா என்ற ரீதியில் கோபம் கொண்ட கயல்விழி, வங்கி மேலாளரை கை நீட்டியிருக்கிறார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மகனான மு.க.அழகிரி திமுகவின் தென்மண்டல அமைப்புச் செயலாளராகவும், மத்திய அமைச்சராகவும் இருந்தார்.
அழகிரியின் மகள் கயல்விழிக்கு சொந்தமாக சென்னையில் அடையாறு பகுதியில் வணிக கட்டடம் ஒன்று அமைந்துள்ளது. அந்த கட்டடத்தில் எஸ்.பி.ஐ. வங்கி செயல்பட்டு வருகிறது. கட்டடத்தில் மின்தூக்கி திடீரென பழுதானதாக கூறப்படுகிறது. இதனால், வங்கிக்கு வந்து செல்லும் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதுகுறித்து கட்டட உரிமையாளருக்கு தகவல் தெரிவித்து பழுதுநீக்கத்தை சரிசெய்ய வங்கி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
அதன்படி, எஸ்பிஐ வங்கியின் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கான கிளை மேலாளர் ஹர்ஷீன் சிங், கயல்விழியின் உதவியாளருக்கு தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளார். ஆனால், அவர் பதில் அளிக்காததால் கயல்விழி அழகிரியை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த கயல்விழி நேராக வங்கி கிளைக்கு சென்றுள்ளார். பின்னர், கிளை மேலாளரின் அறைக்கு சென்றவர் லிப்ட் பழுதுநீக்கம் தொடர்பாக பேசியுள்ளார். இருவரும் மாறி மாறி பேசிக் கொண்டிருந்த போதே கிளை மேலாளரின் செயலை கண்டு கயல்விழி ஆத்திரம் கொண்டுள்ளார்.
உடனே இருக்கையில் இருந்து எழுந்து கிளை மேலாளரின் கன்னத்தில் பளார் என அறைந்துள்ளார். அதை சற்றும் எதிர்பார்காத அவர் அதிர்ச்சியடைந்துள்ளார். தொடர்ந்து மிரட்டல் விடுக்கும் வகையிலும் எச்சரித்துள்ளார். அதைக் கண்டு திகைத்து போய் அருகில் இருந்தவர் கயல்விழி அழகிரியை சமாதானம் செய்துள்ளார்.
இந்த சம்பவம் அனைத்தும் வங்கியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. அதை ஆதாரமாக கொண்டு எஸ்பிஐ முதன்மை மேலாளர் நமச்சிவாயம் சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பெயரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் கயல்விழி அழகிரி மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக மு.க.அழகிரி மகள் கயல்விழியிடம் சாஸ்திரி நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையின் முடிவில் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பது தெரியவரும்!
