அதிமுக முன்னாள் அமைச்சரும் ஓ.பி.எஸ் ஆதரவாளருமான கு.ப.கிருஷ்ணன், விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார்.

அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், ஓ.பி.எஸ்-ஸின் தீவிர ஆதரவாளருமாக இருந்த கு.ப.கிருஷ்ணன் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்.

சென்னை அடுத்த மாமல்லபுரத்துக்கு அருகே பூஞ்சேரியில் தவெக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பிறகு, விஜய் தலைமையில் அதிமுக முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் தவெகவில் இணைந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘‘நாளைக்கு தேர்தல் வைத்தாலும் தவெக வெற்றி பெறும். தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் நிச்சயமாக நடக்கும் என்றார். மேலும் இன்றைய அதிமுக தலைவர்கள் எம்.ஜி.ஆர். ஜெயலலிதாவை மறந்துவிட்டதாகவும் குற்றம்சாட்டினார்.

யார் இந்த கு.ப.கிருஷ்ணன்?

அதிமுகவின் தொடக்க காலத்திலிருந்தே கட்சியில் இயங்கி வந்தவர். ஆலங்குடி மற்றும் ஸ்ரீரங்கம் ஆகிய தொகுதிகளில் இருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். 1991 &- 1996 அதிமுக ஆட்சிக் காலத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் அமைச்சரவையில் வேளாண்மைத் துறை அமைச்சராகப் பதவி வகித்தவர்.

ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட பிளவின்போது முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் பக்கம் நின்று, அவரது தீவிர ஆதரவாளராகச் செயல்பட்டு வந்தார். இந்நிலையில் தற்போது தவெக தலைவர் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் நேற்று இணைந்தார்.

திருச்சி மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்ட கு.ப.கிருஷ்ணன் முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். திருச்சியில் பெரும்பிடுகு முத்தரையர் சிலை அமைக்க காரணமாக அமைந்தவர். தி.மு.க., அ.தி.மு.க.வில் முத்தரையர்களுக்கு முக்கியத்துவம் இல்லை என்ற குமுறல் சத்தம் கேட்கும் நிலையில், த.வெ.க.வில் முதல் அரசியல் மாநாட்டில் பெரும்பிடுகு முத்தரையர் சிலையை விஜய் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

எனவே, முத்தரையவர் வாக்குகள் த.வெ.க.விற்கு அப்படியே போகுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கவேண்டும்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal