வன்முறையில் ஈடுபட்டு புரட்சியை உண்டாக்க வேண்டும் என்று சமூக வலைதளத்தில் கோரிக்கை விடுத்த தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற தவெக தலைவர் விஜயின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 8 குழந்தைகள் உள்பட 41 பேர் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கியது. இந்த சம்பவம் தொடர்பாக தவெக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், இணை பொதுச் செயலாளர் சிடி நிர்மல்குமார் மற்றும் பலர் மீது கரூர் டவுன் போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இதற்கிடையே, தவெக துணைப்பொதுச் செயலாளர்களில் ஒருவரான ஆதவ் அர்ஜுனா வெளியிட்டுள்ள பதிவு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பதிவில், “இப்படி ஆளும் வர்க்கத்தின் அடிவருடிகளாக காவல்துறை மாறி போனால் மீட்சிக்கு இளைஞர்களின் புரட்சி தான் ஒரே வழி. எப்படி இலங்கையிலும், நேபாளத்திலும் இளைஞர்களும், ரீமீஸீக்ஷ் தலைமுறையும் ஒன்றாய் கூடி அதிகாரத்திற்கு எதிரான புரட்சியை உருவாக்கிக் காட்டினார்களோ அதே போல இங்கும் இளைஞர்களின் எழுச்சி நிகழும். அந்த எழுச்சிதான் ஆட்சி மாற்றத்திற்கான அடித்தளமாகவும் அரச பயங்கரவாதத்திற்கான முடிவுரையாகவும் இருக்கப்போகிறது. பேய் அரசாண்டால் பிணந்தின்னும் சாஸ்திரங்கள்!” என்று தெரிவித்திருந்தார்.
கரூர் சம்பவத்தால் தமிழகத்தில் அசாதாரண சூழல் நிலவி வரும் நிலையில் ஆதவ் அர்ஜுனாவின் இந்தப் பதிவு வன்முறையை தூண்டும் வகையிலான கருத்து என்று பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். சர்ச்சைகள் வலுத்த நிலையில் தான் அந்தப் பதிவை ஆதவ் அர்ஜுனா நீக்கியிருக்கிறார்.
தமிழக காவல்துறை ஆதவ் அர்ஜுனா மீது வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில், சென்னை உயர்நீதிமன்றம், ‘வன்முறையை தூண்டும் விதமாக பதிவிட்ட ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், இன்றோ, அல்லது நாளையோ ஆதவ் அர்ஜுனா கைது செய்யப்படலாம் என்கிறார்கள். அல்லது அவர் தலைமறைவாகவும் வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
