வக்ஃப் சட்டத்திருத்த மசோதாவை பொறுத்த வரை, ‘மீனுக்கு தலையும், பாம்புக்கு வாலும்’ என்ற கதையாக இரட்டை வேடம் போடுவதாக ஆளுங்கட்சி மீது எழுந்துள்ள அதிருப்தியால், சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில், ஒட்டுமொத்த இஸ்லாமியர்களின் அதிருப்தியையும் திமுக அறுவடை செய்து வருவதாக கூறப்படும் தகவல்களால் குஷியில் இருக்கின்றன எதிர்க்கட்சிகள்!

காலங்காலமாய் இஸ்லாமியர்களின் முழுக்கட்டுப்பாட்டிற்குள் இருந்த வக்ஃப் சொத்துக்களை பராமரிக்கும் பொறுப்பை மாவட்ட ஆட்சியரின் பொறுப்பில், இஸ்லாமியர்கள் அல்லாதவர்களையும் உறுப்பினர்களாக இணைத்து சொத்துக்கள் தொடர்பான முடிவுகளை எடுக்கும் முன்னெடுப்புகளை எப்போது மத்திய அரசு துவங்கியதோ அப்போதே, வக்ஃப் சட்டத்திருத்தத்திற்கு எதிராக இந்தியா முழுக்க கடும் போராட்டங்களை முன்னெடுத்தனர் இஸ்லாமியர்கள். ஆனால், அதையெல்லாம் கண்டுகொள்ளாத மத்திய அரசோ, புதிய வக்பு சட்டத்தினை கொண்டு வர அனைத்து நடவடிக்கையும் தீவிரப்படுத்தி இருக்கும் நிலையில், தமிழக அரசோ, வக்பு சட்டத்திருத்ததிற்கு நீதி போராட்டத்தை வழுவாக எடுத்து வருகிறது. ஆனால், அதில்யும் ஒரு ட்விஸ்ட் இருப்பதாக கொந்தளிக்கின்றனர் இஸ்லாமிய பெருமக்கள்.

இது குறித்து, இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் சிலர் நம்மிடம் பேசும் போது, “இந்தியாவெங்கும் உள்ள இஸ்லாமிய மக்களின் எதிர்ப்புகள் எதையுமே கண்டு கொள்ளாமல், கடந்த 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8 ஆம் தேதி நள்ளிரவில் வக்ஃப் வாரிய சட்ட்த்திருத்த மசோதா – 2025 ஐ மக்களவையில் சமர்ப்பித்து அதை சட்டமாக்கும் முயற்சியை துவங்கியது மத்திய அரசு. அப்போதே, ‘தனது மாநிலத்தில் திருத்திய வக்பு சட்டத்தினை அமல்படுத்த மாட்டோம்’ திட்டவட்டமாக முதல் குரல் கொடுத்தார் மேற்கு வங்க முதல்வரான மம்தா பானர்ஜி.
ஆனால், சிற்பான்மையினரின் காவலன் என மார்தட்டிக் கொள்ளும் தமிழக அரசோ இந்த சட்டத்திற்கு எதிராக போராடுகிறதே தவிர, ‘தமிழகத்தில் இதை அமல்படுத்த மாட்டோம்’ என்று நேரடியாக இதுவரை சொல்லவில்லை. இது ஒருவகையில் திமுகவினரின் இரட்டை நாடகமாக இருக்குமோ? என்கிற சந்தேகத்தினை தற்போது ஏற்படுத்தி உள்ளது. காரணம், இந்த ஆட்சியில் குறிப்பாக வக்ஃப் வாரியத்தினால் இஸ்லாமியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதும், குறிப்பாக அப்துல் ரஹ்மான் வக்பு வாரிய தலைவராக இருந்த போது தொடர் சர்ச்சைகளுக்கு ஆளாகி வந்த நிலையில் அவரை நீக்கி விட்டு, தற்போது நவாஸ்கனி எம்.பி. பொறுப்பேற்றுள்ள நிலையிலும் சர்ச்சைகள் மட்டும் ஒய்ந்த பாடில்லை, அரசும் அதை கண்டு கொள்வதும் இல்லை.
இதற்கிடையில், தமிழக பரம்பரை முத்தவல்லிகள் அதாவது பரம்பரை அறங்காவலர்கள் அமைப்பு ஒன்றும் உருவாகி உள்ளது. பெரும்பாலும் வக்பு சொத்துக்களை நிர்வகிப்பதற்கு அறங்காவலர்கள் பரம்பரையாகவே தொடர்ந்து இருந்து வருகின்றனர். இப்படி பரம்பரை முத்தவல்லிகளை ஒருங்கிணைத்து ஒரு அமைப்பு உருவாகிய போது, இவர்களும் வக்பு வாரியத்திற்கு எதிராக கோஷம் எழுப்புவார்கள் என்று எண்ணிய போது இந்த அமைப்பினர் தமிழக அரசிற்கு ஆதரவாகவும், தற்போதைய வக்பு வாரிய தலைவர் நவாஸ் கனிக்கு ஆதராகவும் தீர்மானங்கள் நிறைவேற்றி உள்ளனர். குறிப்பாக, அடக்கஸதளம் கட்டுமானப் பணிக்கு தமிழக அரசு உதவித்தொகையை உயர்த்தி வழங்கியதற்கு பாராட்டியும், பரம்பரை முத்தவல்லி நியமனம் 5 ஆண்டுகள் என்று அறிவித்ததை பாராட்டியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஆனால், இதன் பின்னணியை ஆராய்ந்தால் விசயம் வேறு மாதிரி உள்ளது. முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தானின் உதவியாளராக இருந்த முபாரக் என்பவர்தான் இந்த அமைப்பை துவக்கி உள்ளார். இதன் மூலம் எதிர்காலத்தில் திருத்திய வக்பு சட்டம் நடைமுறைக்கு வந்தால் வக்பு இடங்களை பாதுகாக்கவும், பாஜகவின் திட்டத்தினை முறியடிக்க அனைத்து தரப்பு இஸ்லாமியர்களையும் குறிப்பாக வக்பு பள்ளிவாசல் அறங்காவலர்களை ஒருங்கிணைத்து திமுக அரசின் ஆதரவான நிலைப்பாட்டில் பரம்பரை அறங்காவலர்கள் தொடர்ந்து இருக்கவும் இந்த அமைப்பை அவர் உருவாக்கி இருப்பதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே, “வக்பு வாரியத்தின் தரங்கெட்ட செயல்பாடுகளாலும், அது தொடர்பான புகார்களை ஆளுங்கட்சி கண்டு கொள்ளாத காரணத்தாலும், வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் இஸ்லாமியர்களின் வாக்கு திமுகவிற்கு நிச்சயம் குறையும்” என்று உளவுத்துறை அறிந்து வைத்துள்ள நிலையில், இந்த அமைப்பின் மூலம் அரசின் செயல்திட்டங்களை இஸ்லாமிய மக்களிடம் கொண்ட சேர்த்து தற்போது இருக்கும் களங்கத்தினை மறைக்கும் பணியை இந்த அமைப்பு செய்து வருவதாகவே தெரிகிறது.
அது மட்டுமல்லாமல், சில மாதங்களுக்கு முன்பு இஸ்லாமியர்களின் ஒரு பிரிவினர் வக்பு வாரியத்தின் செயல்பாடுகளால் பாதிக்கப்பட்டும் தங்களுக்கு பிரதிநிதித்துவம் தருவதில் பாரபட்சம் உள்ளதால் நடிகர் விஜய் கட்சிக்கோ அல்லது அதிமுகவிலோ தங்களை இணைத்து கொள்ள முடிவெடுத்துள்ளதாக உளவுத் துறை தகவல் வந்திருந்தது. அதற்கு முக்கிய காரணம், தற்போது இருக்கும் அமைச்சர் நாசரும் இஸ்லாமிய சமூகத்தினரிடம் நெருக்கத்திற்கு பதிலாக ஒருவித இருக்கத்தைத்தான் காட்டி வருகிறார்.
எனவே, இந்த நிலையை களைக்க செஞ்சி மஸ்தான் மூலம் இஸ்லாமிய வாக்குகள் சிதராமல் தடுக்க திமுகவே இப்படி ஒரு முயற்சி செய்வதாக சந்தேகிக்கிறோம். ‘எத்தை திண்ணால் பித்தம் குறையும்’ என்பதை போன்று காலம் கடந்து இந்த அரசு எடுத்துள்ள யோசனை நல்லது தான் என்றாலும் வெளிப்படையாக புதிய வக்பு திருத்த சட்டத்தினை அமல்படுத்த மாட்டோம் என்று சொல்வதில் மட்டும் என்ன தயக்கம் என்றே தெரியவில்லை?” என ஆதங்கத்துடன் பேசிய அவர்கள், “ஆனால், திமுகவின் இரட்டை வேடத்தை புரிந்து வைத்துள்ள எங்களைப் போன்ற இஸ்லாமிய தலைவர்கள் எந்தவிதமான தயக்கமும் இல்லாமல், திமுகவிற்கு பாடம் புகட்ட தயாராக இருக்கிறோம்” என தீர்க்கமாக பேசினர் நம்மிடம்.
ஆக, ஆரம்பிக்கப் போகிறதோ அரசியல் உள்குத்து?!