திருச்சி மாவட்ட திமுக என்றால் அது நேரு தான் என்ற பிம்பமே இன்றளவும் கட்டமைக்கப்பட்டு வருகிறது. தலைமைக் கழகத்தில் முதன்மைச் செயலாளராக பதவி உயர்வுபெற்றுவிட்டாலும் சொந்த மாவட்டமான திருச்சி அரசியலை இன்னமும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருப்பவர் நேரு. ஆனால், அவரின்றி திருச்சி திமுக-வில் எதுவும் அத்தனை எளிதில் அசைந்துவிடாது என்று தெரிந்தும் மாவட்ட திமுக எம்எல்ஏ-க்கள் இருவர் நேருவுக்கு எதிராக தங்களது மனக்குமுறலை பொதுவெளியில் பகிரங்கமாக போட்டுடைத்து வருகிறார்கள்.
நேருவின் சொந்த ஊரை உள்ளடக்கிய லால்குடி தொகுதிக்கு எம்எல் ஏ-வாக இருக்கும் சவுந்தரபாண்டியன், “எனது தொகுதிக்குள் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு கூட அதிகாரிகள் என்னை அழைக்கப் பயப்படுகிறார்கள். அதற்குக் காரணம் அமைச்சர் நேரு” என முகநூலில் முன்பு ஆதங்கப்பட்டார். இந்தப் பஞ்சாயத்து அறிவாலயம் வரைக்கும் போய் சமாதானம் செய்துவைக்கப்பட்ட பிறகும் சவுந்தரபாண்டியன் – நேரு சச்சரவுகள் முடிவுக்கு வந்தபாடில்லை.
சவுந்தரபாண்டியனைப் போலவே, ஸ்ரீரங்கம் எம்எல்ஏ-வான பழனியாண்டியும் நேருவுக்கு எதிராக அடிக்கடி பொது மேடைகளில் எதையாவது பேசிவிட்டு கப்சிப் ஆகிவிடுகிறார். 2 ஆண்டுகளுக்கு முன்பு, கரூர் மாவட்டத்தில் உள்ள பழனியாண்டியின் கல் குவாரியில் வருவாய்த்துறையினர் ரெய்டு நடத்தினர். அப்போது, “இதற்குக் காரணம் நேருதான்” என பொத்தாம் பொதுவில் குண்டைத் தூக்கிப் போட்ட பழனியாண்டி, பின்னர் சமாதானமானார்.
இந்நிலையில், அண்மையில் சாலைப்பாதுகாப்பு மற்றும் மாவட்ட வளர்ச்சிப் பணிகள் ஆய்வுக் கூட்டம் திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பழனியாண்டி, “எனது தொகுதியில் கண்ணுடையான்பட்டி, சமுத்திரம் பகுதிகளுக்கு 2 பாலங்கள் கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதை வேறெங்கும் மாற்றிவிடாமல் எனது தொகுதியிலேயே கட்டவேண்டும். ஏனென்றால், ஏற்கெனவே சமுத்திரம் பாலத்தை மண்ணச்சநல்லூர் தொகுதிக்கு மாற்றியதில் எங்கள் அமைச்சர் (நேரு) மீது எனக்கு வருத்தம் உண்டு. அடுத்தவங்க சாப்பாட்டை எடுத்து சாப்பிடக் கூடாதுல்ல” என்று தடாலடியாகப் பேசினார்.
2021-ல் திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளையும் திமுக கூட்டணி வசப்படுத்தியதில் நேருவுக்கு பெரும் பங்கு உண்டு. திருச்சி மாவட்டத்தைப் பொறுத்தவரை தேர்தலில் யாருக்கு சீட் கொடுக்க வேண்டும்… யாருக்கு கொடுக்கக் கூடாது என தீர்மானிப்பவர் நேரு தான். இந்த நிலையில், நேருவுக்கு எதிராக குடைச்சல் கொடுத்து வரும் இந்த 2 எம்எல்ஏ-க்களுக்கும் இந்தத் தேர்தலில் சீட் கிடைப்பது கஷ்டம் தான் என்கிறார்கள் திருச்சி திமுக-வினர்.
இந்த நிலையில்தான் லால்குடி தொகுதியைப் பொறுத்தளவில் இந்தமுறை கூட்டணிக் கட்சிக்குத் தள்ளிவிடப் பார்க்கிறாராம் கே.என்.நேரு. அதே போல், ஸ்ரீரங்கம் தொகுதி இந்தமுறை பழனியாண்டிருக்கு கிடையாது. கே.என்.நேருவைச் சுற்றி வரும் முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்த ‘கலர்’ சட்டைக் காரருக்கு கொடுக்கலாமா? என யோசித்து வருகிறாராம் கே.என்.நேரு. ஆனால், இவரும், சீட் வாங்கி வெற்றி பெற்ற பிறகு இன்னொரு பழனியாண்டியாக வந்துவிடுவாரோ? என்ற எண்ணவோட்டமும் கே.என்.நேருவுக்கு உள்மனதிற்குள் இருக்கிறதாம்.
தவிர, ‘கலர்’ சட்டைக் காரருக்கு சீட் கொடுத்தால், திருச்சியில் உள்ள மற்ற தொகுதிகளில் தி.மு.க. வெற்றி பெறுவது கடினமாகிவிடும். ஏனென்றால் ‘கலர்’ சட்டைக்காரர் ஏற்கனவே காவல்நிலையத்தில் நேரடியாகவே புகுந்து தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை மக்கள் இன்னும் மறக்கவில்லை.
இதற்கிடையே, இந்த முறை முசிறி தொகுதியை முன்னாள் அமைச்சர் வனத்துறை அமைச்சர் மகன் கருணைராஜாவுக்கு கொடுக்க முடிவு செய்திருக்கிறாராம் கே.என்.நேரு. காரணம், 2006 & 2011 காலக்கட்டத்தில்¢ இரண்டு பேரும் அமைச்சராக இருந்தகாலத்தில் நீருபூத்த நெருப்பாக இருந்தது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு ஆட்சி மாற்றம் நடந்தபிறகு கே.என்.நேருவின் அரசியலை சமாளிக்க முடியாமல் என்.செல்வராஜ் அ.தி.மு.க.வில் இணைந்தார். ஆனாலும், கருணை ராஜா மீது மீண்டும் கருணை வைத்திருக்கிறார் கே.என்.நேரு என்கிறார்கள்.