முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி மீதான சொத்துகுவிப்பு வழக்கில், 5 வது முறையாக கோர்ட் மாற்றப்பட்டு நேற்று விசாரணைக்கு வந்த போது, போலீஸ் அதிகாரி ஆஜராக உத்தரவிடப்பட்டது.

கோவை, சிங்கநால்லூரில் வசித்து வருபவர் பொங்கலூர் பழனிச்சாமி; தி.மு.க., ஆட்சி காலத்தில், 2006- 2011 வரை அமைச்சர் பொறுப்பில் இருந்த போது, வருமானத்துக்கு அதிகமாக, 44 லட்சம் ரூபாய்க்கு சொத்து குவித்ததாக, கோவை லஞ்ச ஒழிப்பு போலீசார், 2011, நவ.,28ல் வழக்கு பதிவு செய்தனர். இவர் மீது, கோவை ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டில், 2012, டிசம்பரில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

இந்நிலையில், எம்.பி., எம்.எல்.ஏ., க்கள் மீதான ஊழல் வழக்குகளை விசாரிக்க, சென்னையில் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டது. இதனால் பழனிச்சாமி மீதான வழக்கு விசாரணையும் மாற்றப்பட்டது. சில ஆண்டுகள் கழித்து, மாவட்ட முதன்மை செஷன்ஸ் நீதிமன்றம், ஊழல் வழக்குகளை விசாரிக்க அதிகாரம் இருப்பதாக, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.

அதன்படி 2022ல் மீண்டும் கோவை மாவட்ட முதன்மை செஷன்ஸ் கோர்ட்டிற்கு விசாரணை மாற்றப்பட்டடது. அதன்பிறகு, நீதிபதிகள் சக்திவேல், ராஜசேகர் ஆகியோர் விசாரித்து வந்தனர். இவர்கள், சென்னை ஐகோர்ட் நீதிபதிகளாக பதவி உயர்வு பெற்று சென்ற பிறகு, மாவட்ட நீதிபதி விஜயா பொறுப்பேற்றார்.

அவரது முன்னிலையில், தொடர்ந்து சாட்சி விசாரணை நடத்தப்பட்டு, தீர்ப்பு தேதி அறிவிக்கப்பட இருந்த நிலையில், கடந்த ஜனவரியில் மீண்டும் கோவை முதன்மை சார்பு நீதிமன்றத்திற்கு வழக்கு மாற்றப்பட்டது.

சார்பு நீதிமன்றத்தில் விசாரணை துவங்கிய நிலையில், இந்த வழக்கின் புலன் விசாரணை அதிகாரி சண்முகபிரியாவிடம் குறுக்கு விசாரணை செய்ய, எதிர் தரப்பினர் மனு அளித்தனர். அவர் ஆஜராக காலஅவகாசம் கேட்டதால், வாய்தா போடப்பட்டு வந்தது.

இந்த சூழ்நிலையில், ஊழல் வழக்குகளை விசாரிக்க, மாவட்ட நீதிபதி அந்தஸ்து பெற்ற கோர்ட்டிற்கு அதிகாரம் இருப்பதாகவும், சப்- கோர்ட் நீதிபதிகள் விசாரணை நடத்தக்கூடாது என்றும், ஐகோர்ட் புதிய உத்தரவை பிறப்பித்தது. இதன் காரணமாக, இந்த வழக்கு, ஐந்தாவது முறையாக, கோவை மாவட்ட முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்திற்கு, கடந்த மாதம் மீண்டும் மாற்றப்பட்டது.

அதன்படி, வழக்கு கட்டுகள் மாவட்ட முதன்மை செஷன்ஸ் கோர்ட்டிற்கு மாற்றப்பட்டு, நீதிபதி விஜயா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. அப்போது, பழனிச்சாமி தரப்பில் அவரது வக்கீல் அருள்மொழி ஆஜரானார். அப்போது நீதிபதி, சப்- கோர்ட்டிற்கு மாற்றப்பட்ட பிறகு, மேற்கொண்டு விசாரணை நடத்தப்பட்டதா என கேட்டார்.

விசாரணை நடைபெறவில்லை என்றும், அதே நிலை தொடர்வதாகவும், வக்கீல் பதில் அளித்தார். இதையடுத்து, விசாரணை அதிகாரி ஆஜராக சம்மன் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை வரும், 18 ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal