தமிழகத்தில் பிரபல நாளிதழ் ஒன்றிற்கு பேட்டியளித்த அமித்ஷா‘‘தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயம் ஆட்சி அமைக்கும். அதில் பாஜக அங்கம் வகிக்கும். தமிழ்நாட்டில் அதிமுக தலைமையில் போட்டியிடுகிறோம்; அதிமுகவில் இருந்துதான் முதலமைச்சர் வருவார். அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை நாங்கள் ஒன்றிணைக்கவில்லை, அது அவர்கள் கட்சி பிரச்சனை. அவர்கள் தாங்களாகவே முடிவு எடுக்க வேண்டும்’’ என்று அமித் ஷா பதிலளித்து இருக்கிறார்.
விஜயுடன் கூட்டணியா என்ற கேள்விக்கு, ‘‘சில காலம் காத்திருங்கள், அனைத்தும் தெளிவாகும்’’ என்று கூறியுள்ளார். அதேபோல, லோக்சபா தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட உள்ளன. அதை எதிர்த்து, தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். தமிழகத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் இந்த திட்டத்தை ஏன் செயல்படுத்துகிறீர்கள்? என்று கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. அதற்கு,
‘‘முதலில், உண்மை என்ன என்பதை புரிந்து கொள்ள வேண்டும். லோக்சபா தொகுதி மறுவரையறை தொடர்பாக, ஏதேனும் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறதா? அல்லது லோக்சபா தொகுதி எல்லை நிர்ணய முறை என ஏதேனும் முடிவு செய்யப்பட்டு உள்ளதா? இப்போது, இந்த பிரச்னையை தி.மு.க., ஏன் எழுப்புகிறது என்றால், கட்சித் தலைவர் மகன் உதயநிதியை முன்னிலைப்படுத்துவதால் எழுந்த உட்கட்சி பூசல்கள், தி.மு.க.,வினரின் ஊழல், மோசமடைந்த சட்டம் – ஒழுங்கு போன்றவற்றில் இருந்து தமிழக மக்களின் கவனத்தை திசை திருப்பத்தான்.
இப்படியெல்லாம் இல்லாத விஷயங்களை சொல்லி, அதை பூதாகரப்படுத்துகின்றனர். உண்மையிலேயே தொகுதி வரையறையை செயல்படுத்தும் போது தமிழகத்துக்கு எந்த அநீதியும் நடக்காது எனவும், அனைவரிடமும் ஆலோசனை நடத்தப்படும் எனவும், ஏற்கனவே நான் தமிழகத்துக்கு வந்த போது தமிழகம் மண்ணில் வைத்து உறுதியாக சொல்லி இருக்கிறேன். மேலும் மோடி அரசு தமிழகத்துக்கு உரிய நிதியை தரவில்லை எனவும் திமுக தரப்பு கூபாடு போடுகிறது.
உண்மையில் 2014க்கு முந்தைய 10 ஆண்டுகளில் காங்கிரசுடன் திமுகவும் அங்கும் வகித்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் மொத்தம் 1.53 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே தமிழகத்திற்கு நிதியாக வழங்கப்பட்டது. ஆனால், பாஜக அரசு கடந்த 10 ஆண்டுகளில் 5.48 லட்சம் கோடி ரூபாய் வழங்கி உள்ளது. இது அவர்கள் வழங்குவதை விட மூன்றரை மடங்கு அதிகம். இது தவிர உள்கட்டமைப்புக்கு 1.43 லட்சம் கோடி ரூபாயும், சாலைகளுக்கு 63 ஆயிரம் கோடி ரூபாயும், ரயில்வேக்கு 77 ஆயிரம் கோடி ரூபாயும், 11 மருத்துவ கல்லூரிகளுக்கு 2000 கோடி ரூபாயும், வீடு தோறும் குடிநீர் திட்டத்திற்கு 1.11 லட்சம் கோடி ரூபாயும் தமிழகத்துக்கு மத்திய அரசு செலவிட்டிருக்கிறது.
திருச்சியில் 20,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். எங்களை பொறுத்தவரை தமிழக வளர்ச்சிக்கு நாங்கள் செய்ததில் எங்களுக்கு முழு திருப்தி உள்ளது. திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளதால் பெரிய முதலீடுகள் வராமல் போய்விட்டன. திமுக அரசு தன் பங்கை ஆற்ற தவறிவிட்டது’’ என்று பதிலளித்துள்ளார்.
விஜய்யுடன் கூட்டணியா? என்ற கேள்விக்கு அமித்ஷா அளித்த பதில்தான் பல்வேறு வியூகங்களைக் கிளப்பியிருக்கிறது. அதாவது, தமிழக பா.ஜ.க. தலைவர்கள் விஜய்யை தொடர்ச்சியாக பா.ஜ.க. கூட்டணிக்கு அழைத்து வருகிறார்கள். அவரது பிறந்த நாளன்றும் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள்.
மத்தியில் ஆளும் பா.ஜ.க., ஆந்திராவில் வலுவாக இருந்த ஜெகன் மோகன் ரெட்டியை எதிர்த்து வெற்றி பெற சில காய்களை நகர்த்தினார்கள். அதாவது சந்திரபாபு நாயுடுவுடன் பவன் கல்யாணை கூட்டணி போட வைத்து, அந்தக் கூட்டணியில் பா.ஜ.க.வும் இணைந்து போட்டியிட்டு வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தனர். ஆந்திரா ஃபார்முலாவை தமிழகத்திலும் செயல்படுத்த இருக்கிறராம் அமித் ஷா!
அதாவது, அ.தி.மு.க. கூட்டணியில் விஜய்யை சேர்க்க முயற்சிகள் நடக்கிறதாம். அந்த முயற்சிகள் நிச்சயம் பலிதமாகும் என்ற நம்பிக்கையில் இருக்கிறாராம் அமித் ஷா, அதற்காக சில காய்களையும் நகர்த்தி வருகிறாராம்.
அரசியலில் எதுவும் நடக்கலாம் என்பதுதான் உண்மை..!