கடந்த வெள்ளிக்கிழமை இரவு எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்தார் எல்.கே.சுதீஷ். அப்போது தே.மு.தி.க.வுக்கு ராஜ்யசபா சீட் கொடுக்கப்படும் என எல்லோரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், எடப்பாடி பழனிசாமி அப்போதே, ‘2026 ல் உங்களுக்கு ராஜ்யசபா சீட் கொடுக்கப்படும். நாங்கள் 1ம் தேதி இரண்டு வேட்பாளர்களை அறிவிக்கப்போகிறோம்’ என்று கூறியிருக்கிறார்.

இதற்கு, ‘அக்காவிடம் பேசிவிட்டுதான் பதில் அளிக்க முடியும்’ என எல்.கே.சுதீஷ் சொல்லியிருக்கிறார். இந்த நிலையில்தான் இன்று அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட அடுத்த சில மணி நேரங்களில் பத்திரிகையாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், “அரசியல் பயணம் தேர்தலை ஒட்டியே இருக்கும் என்பதால், தேமுதிகவின் பயணமும் தேர்தலை ஒட்டியே இருக்கும்“ என்று தெரிவித்துள்ளார்.

2026 மாநிலங்களவைத் தேர்தலில்தான் தேமுதிகவுக்கு சீட் என அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், சென்னையில் இன்று (ஜூன் 1) தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது: தற்போதைய மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு சீட் வழங்கப்படும் என அதிமுக தரப்பில் ஏற்கெனவே உறுதி அளிக்கப்பட்டது. ஆனால் இப்போது அடுத்த தேர்தலில் சீட் எனக் கூறுகின்றனர்.

அரசியலில் தேர்தலை நோக்கிதான் அனைத்து பயணமும் இருக்கும் என்பதால் எங்களின் நிலைப்பாடும் அதை நோக்கிதான் இருக்கும். தேர்தலை மனதில் வைத்தே தேமுதிக பயணிக்கிறது. 2026 தேர்தலில் தேமுதிக தனது கடமையை நிறைவேற்றும். இவ்வாறு தெரிவித்தார்.

முன்னதாக தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் ஒதுக்கும்படி கோரி எல்.கே. சுதீஷ் சனிக்கிழமை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்திருந்தார். இந்த நிலையில் அடுத்த மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு சீட் வழங்கப்படும் எனவும், தேமுதிக கூட்டணியில் தொடர்வதாகவும் அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்தநிலையில் இன்றைய செய்தியாளர்கள் சந்திப்பில், அதிமுகவின் நிலைபாடு குறித்தி அதிருப்தியை வெளிப்படுத்திய பிரேமலதா, கூட்டணியில் தொடர்வது குறித்து உறுதியாக எதுவும் தெரிவிக்கவில்லை.

மேலும் மதுரையில் நடைபெறும் திமுக பொதுக்குழுக்கூட்டத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு பிரேமலதா நன்றி தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பல ஊகங்களுக்கு வழிவகுத்துள்ளது.

தவிர, வரும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வோடு போகலாமா? த.வெ.க.வோடு போகலாமா? என்ற குழப்பத்தில் இருக்கிறாராம் பிரேமலதா விஜயகாந்த்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal