‘டாஸ்மாக் நிறுவனத்திற்கும், ‘டான் சினிமா’ நிறுவனத்திற்கும் என்ன தொடர்பு இருக்கிறது. ஒரே சமயத்தில் இரண்டு இடங்களிலும் அமலாக்கத்துறை ரெய்டு நடத்துவதற்கான காரணம் என்ன என நினைக்கிறீர்களா… காரணம் இருக்கிறது…!
தமிழ் திரையுலகில் சமீப காலமாக மிக முக்கியமான தயாரிப்பாளராக இருந்து வரும் ஆகாஷ் பாஸ்கரன் என்பவர் இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். சென்னை தேனாம்பேட்டையில் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வரும் ஆகாஷ் பாஸ்கரனின் வீட்டிலும் மற்ற இடங்களிலும் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.
தமிழ்நாடு டாஸ்மாக் முறைகேடு வழக்கு தொடர்பாக டாஸ்மாக் நிறுவன மேலாண் இயக்குநர் விசாகன் இல்லம் மற்றும் சென்னையின் சென்னையின் பல்வேறு இடங்களிலும் அமலாக்கதுறை அதிகாரிகள் அதிரடி சோதனை செய்தனர்.
கடந்த மார்ச் மாதம் தமிழ்நாடு டாஸ்மாக் தலைமை அலுவலகம், மதுபான தொழிற்சாலைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி கைப்பற்றிய ஆவணங்களின் அடிப்படையில் டாஸ்மாக் நிர்வாகத்தில் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் முறைகேடு நடந்திருப்பதாக அறிக்கை வெளியிடப்பட்டது.
இதையடுத்து, (மே 16) அதிகாலை முதல் சென்னையின் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, சென்னை மணப்பாக்கத்தில் உள்ள டாஸ்மாக் நிறுவன மேலாண் இயக்குநர் விசாகன் வீட்டில் மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படை போலீசார் உதவியுடன் ஐந்துக்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரன் இல்லத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். எதன் அடிப்படையில் சோதனை நடத்தப்படுகிறது என்பது குறித்து இதுவரை அமலாக்கதுறை தரப்பிலிருந்து எந்த ஒரு தகவலும் தெரிவிக்கப்படவில்லை.
டான் பிக்சர்ஸ் எனும் தயாரிப்பு நிறுவனம் மூலம் தமிழில் அதிக பட்ஜெட் மற்றும் பெரிய கதாநாயகர்களின் படங்களை தொடர்ந்து தயாரித்து வருகிறார் ஆகாஷ் பாஸ்கரன். சினிமாவில் உதவி இயக்குநராக சில படங்களில் பணியாற்றி பின்பு தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கிய ஆகாஷ் பாஸ்கரனின் முதல் தயாரிப்பே தனுஷ் நடித்து இயக்கி வரும் ‘இட்லி கடை’.
முதல் படமே தனுஷ் என்றால், இரண்டாவது படத்தில் சிவகார்த்திகேயன் – சுதா கொங்கரா கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘பராசக்தி’ படத்தை தயாரிக்கிறார். தொடர்ந்து அவரே இயக்குநராக பணியாற்றி அதர்வாவை வைத்து ‘இதயம் முரளி’ என்கிற படத்தை இயக்கி தயாரித்துள்ளார்.
இது தவிர, சிம்புவின் 49வது திரைப்படத்தின் பூஜை சமீபத்தில் தான் நடைபெற்றது. மேற்குறிப்பிட்ட திரைப்படங்கள் அனைத்தும் தயாரிப்பு நிலையிலேயே உள்ளன இன்னும் திரையரங்குகளில் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அஜித்தை வைத்து தனுஷ் இயக்கும் படத்தையும் ஆகாஷ் தயாரிக்கப் பேச்சுவார்ததை நடந்துவருவதாக அவரே ஒரு முறை குறிப்பிட்டிருக்கிறார்.
தொடர்ந்து அதிக பட்ஜெட் மற்றும் பெரிய ஹீரோக்களின் படங்களை தயாரித்து வரும் ஆகாஷ் பாஸ்கரன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் நெருங்கிய நண்பர் எனக் கூறப்படுகிறது.
சமீபத்தில் நடந்த ஆகாஷ் பாஸ்கரன் திருமணத்தை முதலமைச்சர் ஸ்டாலின், துர்கா ஸ்டாலின் இருவரும் முன் நின்று நடத்தி வைத்தனர். மேலும் உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஷ் என அரசியல் ஆளுமைகளும் தனுஷ், நயன்தாரா, அனிருத், சிவகார்த்திகேயன், அட்லி உள்ளிட்ட திரைப்பிரலங்கள் பலரும் அவரது கலந்துகொண்டது தமிழ் திரையுலகையே ஆச்சரியப்படுத்தியது.
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் மாப்பிள்ளையான வாளாடி கார்த்தி ஆகாஷ் பாஸ்கரன் சகோதரியை திருமணம் செய்திருக்கிறார். தவிர தம்மம்பட்டி, துறையூர் வழியாக திருச்சி செல்லும் வேலவன் டிரான்ஸ்போர்ட்டின் உரிமையாளரும் ஆகாஷ் பாஸ்கரன்தான். ‘டான்’ என்றால் ‘சூரியன்’… சூரியனை குறிக்கும் பட நிறுவனத்தில் கோடிகளை முதலீடுகளாக போட்டிருப்பதுதான் அமலாக்கத்துறை ஆச்சர்யப்படுத்தியது… அதே சமயம், டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ஊழல் நடந்திருக்கிறது என அமலாக்கத்துறை கூறியது.
சமீபத்தில் சென்னை வந்த அமித் ஷா, ‘டாஸ்மாக்கில் 39 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்திருக்கிறத’ என்றார். இப்போது புரிகிறதா டாஸ்மாக்கிற்கும் ஆகாஷ் பாஸ்கரன் ‘டான்’ சினிமா நிறுவனத்திற்கும் என்ன தொடர்பு என்பது?